பணக்கார வீட்டுப் பிள்ளை என்றாலும் பண்பாளர் - விஜயகாந்த் மறைவு குறித்து அவரது பால்ய நண்பர் உருக்கம்

எனது ஆருயிர் நண்பனை இழந்து தவிக்கிறேன்

Dec 29, 2023 - 17:46
Dec 30, 2023 - 18:22
பணக்கார வீட்டுப் பிள்ளை என்றாலும்  பண்பாளர் - விஜயகாந்த் மறைவு குறித்து அவரது பால்ய நண்பர் உருக்கம்

பணக்கார வீட்டுப் பிள்ளை என்றாலும் அனைவரிடமும் சகஜமாக பழகக் கூடியவர் நடிகர் விஜயகாந்த் என அவரது பால்ய நண்பர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

தேமுதிக நிறுவன தலைவரும், திரைப்பட நடிகருமான விஜயகாந்த் நேற்று உடல்நிலை குறைவால் உயிர் இழந்தார். அவரது மறைவு கேட்டு ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மறைந்த விஜயகாந்த் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் என்றாலும் அவருக்கு படிப்பு சரியாக வரவில்லை எனக்கூறி அவரது பெற்றோர்கள் விஜயகாந்தை திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே விக்ரமசிங்கபுரம் என்ற பகுதியில் அமைந்துள்ள புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் படிக்க வைத்துள்ளனர்.

அதன்படி கடந்த 1965-66ல் விஜயகாந்த் அப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பும் 1966- 67 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பும் பயின்றுள்ளார். அப்போது அவருடன் விக்கிரமசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்ற பாலு பத்தாம் வகுப்பில் விஜயகாந்துடன் ஒரே வகுப்பறையில் அமர்ந்து படித்துள்ளார். பாலு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

 இந்த நிலையில் விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டு அவரது பால்ய நண்பரான பாலு பெரும் அதிர்ச்சியில் உள்ளார். மேலும் இன்று காலை முதல் அவர் கண்ணீர் விட்டு அழுது வருவதாகவும் வேதனையோடு தெரிவித்தார்.இது குறித்து பாலு நம்மிடம் பேசுகையில், ”விஜயகாந்துக்கு சரியாக படிப்பு வரவில்லை என்பதால் அவரது பெற்றோர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் விடுதியில் சேர்த்து படிக்க வைத்தனர். அப்போது நானும் விஜயகாந்த்தும் ஒரே வகுப்பறையில் பயின்றோம்.

பத்தாம் வகுப்பில் விஜயகாந்த் நானும் ஒரே பெஞ்சில் அமர்ந்து படித்தோம். விஜயகாந்த் பள்ளி நாட்களில் சினிமாவிலோ அல்லது அரசியலிலோ பெரிய ஆர்வம் இல்லாதவராகத்தான் இருந்தார். பணக்கார வீட்டு பிள்ளை என்றாலும் அனைத்து நண்பர்களிடமும் விஜயகாந்த் சகஜமாக பழகக் கூடியவர்.

ஏழை, பணக்காரன் என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல் என்னுடன் பழகி வந்தார். விக்கிரமசிங்கபுரத்தில் பள்ளியில் படித்த நாட்களில் இங்கிருந்து குற்றால சீசனின் போது குற்றாலத்திற்கு ஒன்றாக சென்று குளித்ததை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. ரெயிலில் சென்றபோது அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். அப்போது கடையம் ரெயில்வே நிலையத்தில் எங்களிடம் விசாரித்தனர். அப்போது நான் தான் இழுத்தேன் என விஜயகாந்த் பெருந்தன்மையோடு உண்மையை தெரிவித்தார். 

பத்தாம் வகுப்பிற்கு பிறகு எனக்கும் அவருக்கும் தொடர்பில்லை. நாளடைவில் சினிமாவில் அவரை பார்த்து அவர் திரைப்படம் நடிப்பதை தெரிந்து கொண்டேன். பின்னர் முதல் முறையாக பூந்தோட்ட காவல்காரன் படபிடிப்பின்போது பொள்ளாச்சியில் வைத்து விஜயகாந்தை மீண்டும் நான் பார்த்தேன். அப்போது என்னை ஞாபகம் வைத்து என்னிடம் எளிமையாக பேசினார்.

தொடர்ந்து பொள்ளாச்சியில் நான் பணிபுரியும்போது அவர் சூட்டிங் வரும்போது எல்லாம் நானும் எனது மனைவியும் அங்கு செல்வோம். அவருக்கு பிடித்த மீன் குழம்பு சமைத்து எடுத்து செல்வோம். அவர் ஆசையோடு விரும்பி சாப்பிடுவார். அவரது குடும்பத்தில் அனைவரும் எங்களிடம் நன்றாக பழகினார்கள். இன்று அவர் மறைவு செய்தியை கேட்டு மிகவும் சிரமப்பட்டேன். எனது ஆருயிர் நண்பனை இழந்து தவிக்கிறேன்” என்று கண்ணீரோடு தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow