சூடு பிடிக்கும் நாடாளுமன்ற தேர்தல்... சென்னை வந்தார் தலைமைத் தேர்தல் ஆணையர்... யாரையெல்லாம் சந்திக்கிறார்..?

மாவட்ட ஆட்சியர்களுடன் தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து ஆலோசனை தொடங்கியது.

Feb 23, 2024 - 08:44
Feb 23, 2024 - 11:00
சூடு பிடிக்கும் நாடாளுமன்ற தேர்தல்... சென்னை வந்தார் தலைமைத் தேர்தல் ஆணையர்... யாரையெல்லாம் சந்திக்கிறார்..?

2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்ய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் குழுவினர் சென்னை வந்தடைந்த நிலையில், 2 நாட்களில் அரசியல் கட்சிகள், அரசு அதிகாரிகள், தேர்தல் ஆணையர்கள் உள்ளிட்ட பலருடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பல்வேறு மாநிலங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு, தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் 3 துணைத் தேர்தல் ஆணையர்கள் சென்னை வந்தடைந்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் தலைமையிலான குழுவினரை தமிழக தலைமை தேர்தல் அதிகாரிகள்  வரவேற்றனர். இன்று காலை 11 மணியில் இருந்து பகல் 1 மணி வரை மீனம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் குறித்து கருத்துகளைக் கேட்டுப்பெற உள்ளனர். இதைத் தொடர்ந்து இரவு 8 மணி வரை மாவட்ட ஆட்சியர்களுடன் ஆயத்தப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன் பின்னர் நாளை (பிப். 24-ம் தேதி) தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். அதைத் தொடர்ந்து, பல்வேறு அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்கின்றனர். இதை முடித்துக்கொண்டு நாளை மாலை விமானம் மூலம் டெல்லி புறப்படுகின்றனர். 
What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow