அரவிந்த் கெஜ்ரிவால் பிரசார வியூகம்.. ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களுடன் அவசர ஆலோசனை
திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார். தேர்தல் பிரசார வியூகம் குறித்து ஆலோசிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு புதிய மதுபானக் கொள்கை அமல்படுத்தப்பட்டபோது ஊழல் நடந்ததாக பாஜக குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின், சஞ்சய் சிங் ஆகிய ஆம்ஆத்மி தலைவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறையால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
மக்களவைத் தேர்தலையொட்டி பிரசாரத்தில் ஈடுபட ஜாமீன் கோரிய அனைத்து மனுக்களையும் டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து முதலமைச்சர் அலுவலகம் செல்லக்கூடாது உள்ளிட்ட 5 நிபந்தனைகளுடன் ஜூன் 1ம் தேதிவரை உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. தொடர்ந்து எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சிறையில் இருந்து வெளியேறிய அவர், டெல்லி கன்னாட் பிளேசில் உள்ள அனுமான் கோயிலில் சாமிதரிசனம் செய்தபின் ஆம்ஆத்மி அலுவலகத்தில் கட்சித் தொண்டர்களிடையே உரையாற்றினார்.
மீண்டும் ஜூன் 2ம் தேதி அவர் சிறைக்குத் திரும்ப வேண்டும் என்ற நிலையில், 15 நாட்களுக்கும் பல்வேறு முக்கிய ஆலோசனை - பிரசாரங்களுக்கு ஆம்ஆத்மி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் நாளை தனது இல்லத்தில் ஆம்ஆத்மி எம்.எல்.ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
அப்போது தேர்தல் ஆலோசனை, பிரசார வியூகங்கள் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. தொடர்ந்து கூட்டத்தில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்மான், கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?