தஞ்சை நாகநாதர் கோவில் சிலைகளை கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது
12 ஐம்பொன் சிலைகளை ஏற்கனவே கொள்ளையடிக்க முயற்சி செய்ததும் தெரியவந்தது.
தஞ்சை நாகநாதர் கோவிலில் 12 ஐம்பொன் சிலைகளை கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சையை அடுத்த பூக்குளம் பகுதியில் பழைய திருவையாறு சாலையில் வேதவள்ளி உடனாகிய நாகநாதர் கோவில் அமைந்து உள்ளது. 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் 12 ஐம்பொன் சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது.இது தொடர்பாக தஞ்சை மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன் பேரில் ஆய்வாளர் சந்திரா மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கோவிலின் பின்புறம் உள்ள குளத்தின் கரையில் சாக்கு மூட்டையில் இருந்த 12 ஐம்பொன் சிலைகளையும் போலீசார் மீட்டனர்.இந்த நிலையில் அந்த கோவிலில் உள்ள சாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்த 9 கிராம் நகைகள் மற்றும் 16 கிராம் வெள்ளி பொருட்களும் திருட்டு போனது. இதன் மதிப்பு ரூ.54 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.இதுகுறித்து தஞ்சை மேற்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.இந்த வழக்கு தொடர்பாக தஞ்சை கரந்தை இரட்டைபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஆனந்த்(27)என்பவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் கோவிலில் இருந்த 12 ஐம்பொன் சிலைகளை ஏற்கனவே கொள்ளையடிக்க முயற்சி செய்ததும், தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மீட்ட போலீசார் ஆனந்தை கைது செய்தனர்.
What's Your Reaction?