அயோத்தி ராமர் கோயில் தினமும் ஒரு மணி நேரம் மூடல்
5 வயது பாலகனான ராமரால் நீண்ட நேரம் விழித்திருக்க முடியாது என்பதால் ஓய்வளிக்கும் வகையில் ஒரு மணி நேரம் நடை அடைக்கப்படும் என தகவல்
அயோத்தி ராமர் கோயிலின் நடை தினமும் ஒரு மணிநேரம் அடைக்கப்படும் என கோயிலின் தலைமை அர்ச்சர்கர் ஆச்சாரிய சத்யேந்திர தாஸ் கூறியிருக்கிறார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயிலில், குழந்தை ராமர் விக்ரஹம் பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 23-ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அன்றாடம் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். காலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 6 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், கோயில் நடைதிறப்பு நேரத்தில் மாறுதலை நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. அதன்படி மதியம் 12.30 முதல் 1.30 வரை நடை அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள கோயில் தலைமை அர்ச்சர்கர் ஆச்சாரிய சத்யேந்திர தாஸ், மூலர் குழந்தை ராமர் அதிகாலை 4 மணிக்கு எழுந்து, 6 மணி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 5 வயது பாலகனான அவரால் நீண்ட நேரம் விழித்திருக்க முடியாது. அதனால், அவருக்கு சிறிது நேரம் ஓய்வளிக்கும் வகையில் ஒரு மணி நேரம் நடை அடைத்து வைக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதுவரை ராமர் கோயிலில் 30 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் ராமரை தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?