பெகாசஸ் போல் புதிய "கூலிப்படை ஸ்பைவேர்" அதிரவைக்கும் IPhone எச்சரிக்கை.. இந்திய தலைவர்களுக்கு மீண்டும் செக்?!

மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், பெகாசஸ் போன்றே, இந்தியா உட்பட 92 நாடுகளுக்கு புதிய கூலிப்படை, அதாவது வேவு பார்க்கும் ஸ்பைவேர் அச்சுறுத்தல் எச்சரிக்கையை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Apr 11, 2024 - 15:17
பெகாசஸ் போல் புதிய "கூலிப்படை ஸ்பைவேர்" அதிரவைக்கும் IPhone எச்சரிக்கை.. இந்திய தலைவர்களுக்கு மீண்டும் செக்?!

ராகுல்காந்தி, சீதாராம் யெச்சூரி, மஹூவா மொய்த்ரா என முக்கிய எதிர்கட்சித் தலைவர்கள், 40 பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன்கள், பெகாசஸ் என்ற மென்பொருளால் ஒட்டுக்கேட்கப்பட்டதாக, 2021ம் ஆண்டு பெரிய பூகம்பம் கிளம்பியது.. தற்போது அதேபோன்ற மற்றொரு அச்சுறுத்தல் இந்தியா உள்ளிட்ட 92 நாடுகளை குறிவைத்துள்ளதாக, ஐபோன் நிறுவனம் அறிவித்துள்ளது..

கூலிப்படை ஸ்பைவேர் என்பது என்ன?

வழக்கமான சைபர் கிரைம் செயல்பாடுகளை விட மிகவும் சிக்கலான இந்த வேவு பார்க்கும் ஸ்பைவேர், குறிப்பிட்ட சில நபர்களை மட்டும் குறிவைத்து விதிவிலக்கான ஆதாரங்களைப் பெற்று செயல்படும் வகையில் வடிவமைக்கப்படும் என ஐஃபோன் நிறுவனம் அறிவித்துள்ளது. குறுகிய கால நடவடிக்கைக்காக, மில்லியன் கணக்கான டாலர்கள் இதில் முதலீடு செய்யப்படுவதாகவும், அதனை கண்டறிவதும், தடுப்பதும் மிக மிகக் கடினமான பணி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

என்ன செய்ய வேண்டும்?

appleid.apple.com-ல் உள்நுழைந்த உடனேயே அச்சுறுத்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும், இமேயில் - imessage மூலமும் எச்சரிக்கை விடுக்கப்படும் எனவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த எச்சரிக்கை வந்ததும், உடனடியாக settings ல் உள்ள Privacy & Security-ன் Lockdown Mode -ஐ உடனடியாக ஆன் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. தனித்தனியாக குறிவைக்கப்படும் பயனர்களுக்கு எதிராக, இதன்மூலம் வலுவான பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Latest iOS version-னுக்கு ஏற்றவாறு ஆப்பிள் users அனைவரும் உடனடியாக அப்டேட் செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது...

கூடுதல் வழிமுறைகள் என்னென்ன..

தேவையற்ற லிங்குகளுக்குள் நுழைவதை தவிர்க்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதும், தங்களுக்கு சந்தேகம் எழும் பட்சத்தில், உடனடியாக Lockdown mode-ஐ ஆன் செய்ய வேண்டும் எனவும் ஐபோன் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடாமுயற்சியுடன் கூலிப்படை ஸ்பைவேர் ஹேக்கர்கள் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுப்பார்கள் என்பதால், அதனை தவிர்க்க, நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ஆலோசனையைப் பெற முடியவில்லையெனில், கூடுதல் முன்னெச்சரிக்கையாக முக்கிய இணையதள சேவைக்கான கடவுச்சொற்களை உடனடியாக மாற்றுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்கு இதனால் பாதிப்பு உள்ளதா?

மிகக்குறைந்த எண்ணிக்கையிலான தனிநபர்கள் மட்டுமே இதன் மூலம் குறிவைக்கப்படுவதாகவும், பத்திரிகையாளர்கள் - சமூகஆர்வலர்கள் - அரசியல்கட்சியினர் இதன்மூலம் குறிவைக்கப்படுவதாகவும் ஐபோன் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பிட்ட நபர்களின் பெயர் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. 2021 பெகாசஸ் முதல் தற்போது வரை, 150 நாடுகளுக்கு இதன்மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2021ம் ஆண்டு பெகாசஸ் விவகாரம் இந்தியாவையே உலுக்கிய நிலையில், மக்களவைத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக இந்த கூலிப்படை ஸ்பைவேர் அச்சுறுத்தல், புதிய புயலைக் கிளப்பியுள்ளது...

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow