ஒரே நாடு ஒரே தேர்தல்.. முரட்டுத்தனமான அரசியல்..! அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்..!
பாரம்பரியமான குடும்பங்களில் இருந்து வந்தவர்களை பார்த்து வாரிசு அரசியல் என்பதை ஏற்க முடியாது
பல்வேறு மொழிகளும், பழக்கவழக்கமும் கொண்ட நாடான இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தேர்தலை கொண்டு வர நினைப்பது முரட்டுத்தனமான அரசியல் என்று திருவள்ளூரில் அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி நடைபெற்றது. கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது, பல்வேறு மொழிகளும் பழக்கவழக்கமும் கொண்ட நாடான இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தலை கொண்டு வர நினைப்பது முரட்டுத்தனமான அரசியல் என்று திருவள்ளூரில் அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.
குடவோலை முறையை ஏற்படுத்தி, 2,500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தேர்தல் நடத்தியுள்ளனர் என்று குறிப்பிட்ட அவர், ஒரே தேர்தல் நடைமுறையை ஏற்க முடியாது என்று கூறினார். சட்டப்பேரவையில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தபோது எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்காமல் ஏற்றுக் கொண்டதால் வலிமையான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது என்று பேசினார்.
மேலும், காங்கிரஸில் இருப்பவர்கள் வாரிசு அரசியல் செய்வதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டுவதைக் குறிப்பிட்ட அமைச்சர் துரைமுருகன், பாரம்பரியமான குடும்பங்களில் இருந்து வந்தவர்களை பார்த்து வாரிசு அரசியல் என்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் 39 நாடாளுமன்ற தொகுதியிலும் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது என்றும், இதனால் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி, ஜனநாயகத்தை காப்பாற்றும் என்றும் பேசினார்.
What's Your Reaction?