பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... பிப்.29-ல் வெளியாகிறது?
மக்களவை தேர்தலுக்கான பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் பிப்ரவரி 29-ஆம் தேதி வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
2024 மக்களவைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 'இந்தியா' கூட்டணியில் முக்கிய தேசியக் கட்சிகளாக உள்ள காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி தொகுதி உடன்பாடு கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிந்த நிலையில் தற்போது ஆம் ஆத்மியுடனான தொகுதிப் பங்கீடும் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் சண்டீகரிலும், கோவாவில் உள்ள 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து களம் காணும் எனவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், மகாராஷ்டிராவில் சிவசேனை உத்தவ் தாக்கரே அணி - தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் விரைவில் தொகுதி உடன்பாடு அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜகவின் மையக்குழுக் கூட்டம் வரும் 29 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் 100 முதல் 120 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற உள்ளதாகவும் தமிழகத்தில் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பெயரும் அன்று வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க :
https://kumudam.com/Vijayatharanis-post-lost-due-to-party-defection-law-What-does-the-law-say
What's Your Reaction?