இனி குழந்தையின் பிறப்பு பதிவேட்டில் இதெல்லாம் கட்டாயம்.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

குழந்தை பிறப்பு பதிவேட்டில் குழந்தையின் தாய், தந்தையின் மதத்தை தெரிவிப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது வரை பிறப்பு, இறப்பு தரவுகள் மாநில அளவில் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், இனி தேசிய அளவில் இவை பராமரிக்கப்படும்.

Apr 5, 2024 - 15:49
இனி குழந்தையின் பிறப்பு பதிவேட்டில் இதெல்லாம் கட்டாயம்.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடரின் போது பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்படி பல்வேறு புதிய அம்சங்கள் இந்த சட்ட திருத்தத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக குழந்தை பிறப்பு பதிவேட்டில் குழந்தையின் தாய், தந்தையின் மதத்தை தெரிவிப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாநில அரசுகள் இந்த விதிகளை முறையாக ஏற்றுக்கொண்டு அது குறித்த அறிவிப்பை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுவரை குடும்பத்தின் மதம் மட்டுமே பிறப்பை பதிவு செய்யும் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு வந்தது. தற்போது பிறப்பு பதிவுக்கான படிவம் 1-ல் சில திருத்தங்கள் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் தாயின் மதம், தந்தையின் மதம் என இரண்டு கேள்விகள் சேர்க்கப்பட்டு, அதற்கு நேர் எதிரில் தேர்வு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குழந்தையைத் தத்தெடுக்கும் பெற்றோர்களுக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை பிறப்பு, இறப்பு தரவுகள் மாநில அளவில் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், இனி தேசிய அளவில் இவை பராமரிக்கப்படும். 

கல்வி நிறுவனங்களில் சேருதல், ஓட்டுநர் உரிமம் பெறுதல், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், திருமணங்களை பதிவு செய்தல், அரசு பணிகளுக்கான நியமனம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் போது பிறப்புச் சான்றிதழ்கள் முதன்மை ஆவணமாக இனி பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow