துணை வேந்தருக்கு வழங்கப்பட்ட ஜாமினுக்கு எதிரான வழக்கு-ஜன.19ம் தேதி விசாரணை

ஜனவரி 19ம் தேதி வழக்கை விசாரணைக்கு பட்டியலிடும் படி பதிவுத்துறைக்கு உத்தரவு

Jan 12, 2024 - 16:48
Jan 12, 2024 - 22:12
துணை வேந்தருக்கு வழங்கப்பட்ட ஜாமினுக்கு எதிரான வழக்கு-ஜன.19ம் தேதி விசாரணை

பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகன்நாதனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு எதிரான காவல்துறை வழக்கை ஜனவரி 19ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடும் படி பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், விதிகளை மீறி, அரசு அனுமதி பெறாமல், பல்கலைகழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக, சொந்தமாக பெரியார் பல்கலைகழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேசன் (PUTER) என்ற அமைப்பை தொடங்கி, அரசு நிதியை பயன்படுத்தியதுடன், பல்கலைக்கழக அதிகாரிகளைக் கொண்டே அந்த நிறுவனத்தை செயல்படச் செய்ததாக, பல்கலைகழகத்தின் ஊழியர் சங்கத்தினர் (PUEU) காவல்துறையில் புகார் அளித்திருந்தனர்.

அதேபோல ஜாதிப்பெயரை குறிப்பிட்டு திட்டியதாக கிருஷ்ணவேணி, சக்திவேல் ஆகியோரும் துணைவேந்தருக்கு எதிராக புகார் அளித்திருந்தனர். புகார்களின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் கருப்பூர் காவல் நிலையத்தினர், வழக்குப்பதிவு செய்து, துணைவேந்தர் ஜெகநாதனை காவல்துறை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டு சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட மறுத்த மாஜிஸ்திரேட், நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.இந்த இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி, சேலம் கூடுதல் ஆணையர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு கடந்த முறை நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் தனிநபர் சுதந்திரமும் சம்பந்தப்பட்டுள்ளதால் துணைவேந்தர் தரப்பு வாதங்களையோ? பாதிக்கப்பட்ட புகார்தாரர் தரப்பு வாதங்களையோ? கேட்காமல் உத்தரவு பிறப்பிப்பது முறையாக இருக்காது என்பதால் ஜனவரி 12ம் தேதி துணைவேந்தர் தரப்பு பதிலளிக்கும் படி உத்தரவிட்டது. 

இந்நிலையில் இந்த வழக்கு பட்டியலிடப்படாத நிலையில், நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன்பு அரசு வழக்கறிஞர் விரைவாக விசாரணைக்கு பட்டியலிட கோரிக்கை வைத்தார். அதை ஏற்ற நீதிபதி ஜனவரி 19ம் தேதி வழக்கை விசாரணைக்கு பட்டியலிடும் படி பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow