இப்ப தாண்டுனாதான் சரியா இருக்கும்.. பாஜகவுக்கு படையெடுக்கும் காங்கிரஸ் புள்ளிகள்? லிஸ்ட் பெருசா போகும் போலயே?
அண்மையில் விளவங்கோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி பாஜகவில் இணைந்த நிலையில் மேலும் சில எம்பிக்கள் பாஜகவுக்கு தாவ உள்ளதாக தகவல் பரவுவதால் தமிழக காங்கிரஸ் வட்டாரம் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தல் கூடிய விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் நாடு முழுவதும் இந்திய கூட்டணியில் உள்ள முக்கிய எம்.பி., எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் குமரி மாவட்டம் விளவங்கோடு எம்.எல்.ஏ.வாகவும், சட்டப்பேரவை காங்கிரஸ் கொறடாவாகவும் இருந்த விஜயதரணி, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஆனால், வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த்துக்கு அத்தொகுதியை வழங்கியது கட்சி மேலிடம். இதனால், காங்கிரஸ் தலைமையின் மீது அதிருப்தியில் இருந்தார் விஜயதரணி. மேலும், கட்சிக்குள் உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டி இருந்தார். இதனால், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைவார் என்று பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று (பிப்.24-ம் தேதி) டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
இதையடுத்து, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு-க்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், தமது எம்.எல்.ஏ பதிவியை ராஜினாமா செய்வதாக விஜயதரணி கடிதம் எழுதி, சபாநாயகர் அப்பாவுவுக்கு அனுப்பியிருந்தார். இதையடுத்து விஜயதரணி அளித்த கடிதத்தை ஏற்பதாக அப்பாவு அறிவித்துள்ளார். ராஜினாமா ஏற்கப்பட்டதால் விளவங்கோடு தொகுதி காலி என விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தொகுதி காலி என அறிவிக்கப்பட்டால் ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதனால் நாடாளுமன்றத் தேர்தலுடனேயே இடைத்தேர்தலும் நடத்தப்படலாம் என்றும் பேசப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தின் மத்திய மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஒருவரும், தென் கோடி மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு காங்கிரஸ் எம்.பி.யும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய நிர்வாகிகள் கலகத்தில் உள்ளனர். அதுமட்டுமல்லாது தன்னுடன் நெருக்கமாக அரசியலில் பயணித்த சிலருடன் பேச்சுவார்த்தையை விஜயதாரணியே துவக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
What's Your Reaction?