ஊழியரைத் தாக்கியதாக நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு
திரைப்பட நடிகை பார்வதி நாயர் மீது சென்னை தேனாம்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பார்வதி நாயர் அவரது வீட்டில் பணிபுரிந்த ஊழியரைத் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அவர் மீதும், அயலான் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கொடப்பாடி ராஜேஷ் உள்பட 7 பேர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மலையாள நடிகையான பார்வதி நாயர் தமிழில் உத்தம வில்லன், என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பரவலாக அறியப்படுபவர். சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகிற இவரது வீட்டில் கடந்த 2022ம் ஆண்டு 10 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரங்கள், ஐபோன், லேப்டாப் உள்ளிட்ட பொருள்கள் காணாமல் போய் விட்டதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரில் தனது வீட்டில் பணிபுரிந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறியிருந்தார்.
அதே நேரத்தில் சுபாஷ் சந்திரபோஸ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில், பார்வதி நாயர் உள்பட 7 பேர் மீது புகார் அளித்திருந்தார். அப்புகாரில்,பார்வதி நாயர் உள்பட 7 பேர் அவரது வீட்டில் தன்னை அடைத்து வைத்துத் தாக்கி துன்புறுத்தியதாகக் கூறியிருந்தார். சுபாஷ் அளித்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை அடுத்து அவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இதற்காக வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி, சுபாஷ் அளித்த புகார் மீது உடனடியாக வழக்குப் பதிந்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சென்னை காவல்துறைக்கு உத்தரவிட்டார். அப்படியிருந்தும் தற்போது வரை வழக்குப் பதியாததை அடுத்து சென்னை காவல் ஆணையரிடம் மீண்டும் சுபாஷ் தரப்பில் இந்த வாரம் புகார் அளிக்கப்பட்டது. அப்புகாரைத் தொடர்ந்து, காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், பார்வதி நாயர், கொடப்பாடி ராஜேஷ், அருண் முருகன், இளங்கோவன், செந்தில், அஜித் பாஸ்கர் உள்பட 7 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
What's Your Reaction?