சாதியைச் சொல்லி தன்னைத் தாக்கியதாக பெண் எஸ்.ஐ. மீது புகார் தந்த பெண்
சாதி பெயரை சொல்லி கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
நீதி கேட்டு காவல் நிலையம் சென்ற பெண்ணை சாதிப் பெயரைச்சொல்லி பெண் உதவி ஆய்வாளர் தாக்கியதாக பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி.இவரது கணவர் ராஜலட்சுமியின் நடத்தையில் சந்தேகப்படுவதுடன் அவரை அடித்து துன்புறுத்துவதாக கூறப்படுகிறது.இதுகுறித்து ராஜலட்சுமி ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார்.
இந்த நிலையில் ராஜலட்சுமியின் புகாரை விசாரிக்க மறுத்த உதவி பெண் காவல் ஆய்வாளர் தேவிப்பிரியா என்பவர் ராஜலட்சுமியை சாதி பெயரை சொல்லி கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் காவல் உதவி ஆய்வாளர் தன்னை தாக்கியதாகத்கூறி ராஜலட்சுமி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட ராஜலட்சுமியின் தங்கை பழனியம்மாள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”எனது அக்காவை அவரது கணவர் சந்தேகப்பட்டார். எனவே அக்கா என்னுடன் வசித்த நிலையில் மீண்டும் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி ஆலங்குளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றோம். ஆனால் உதவி ஆய்வாளர் தேவி பிரியா எங்கள் புகாரை வாங்காமல் அக்காவை அடித்து துன்புறுத்தினார். காது, வாய் மற்றும் நெஞ்சில் கடுமையாக தாக்கினார். நெஞ்சில் ஓங்கி குத்தியதில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. சாதி பெயரை சொல்லி திட்டுகிறார். மகளிர் காவல் நிலையம் என்பதால் நம்பிக்கையோடு சென்றோம். ஆனால் நம்பிக்கையை இழந்து நிற்கிறோம். எங்களை மிக தரக்குறைவாக நடத்தினார்கள். அரசாங்கம் ஏழைகளுக்கு உதவி செய்யாதா? என கண்ணீர் மல்க கேள்வி எழுப்பினார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட ராஜலட்சுமி கூறும்போது, ”வீட்டில் கணவர் அடித்து துன்புறுத்துகிறார் என்பதால் நியாயம் கேட்க காவல் நிலையம் சென்றேன். அங்கே உதவி ஆய்வாளர் என்னை மிகவும் தரக்குறைவாக திட்டி தாக்கினார். என்னால் முடியவில்லை காவல் நிலையத்தில் எனது கணவருக்கு ஆதரவாகவே அனைவரும் பேசினர். புகாரை வாங்காமல் என்னை தரத்தரவென இழுத்து வெளியே தள்ளி விட்டனர். வலி தாங்க முடியாமல் மருத்துவமனைக்கு வந்து விட்டேன். நான் தப்பானவள் என கூறுகிறார்கள். அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்டால் சாதிப்பெயரை சொல்லி என்னை திட்டினார் என ராஜலட்சுமி கண்ணீருடன் கூறினார்.
பொதுமக்களுக்கு நியாயம் வழங்க வேண்டிய இடத்தில் இருக்கும் காவல்துறை பெண் அதிகாரி சக பெண் மனுதாரரை சாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?