40 ஆண்டுகளுக்குபின் தேரோட்டம்.. சக்கரம் உடைந்ததால் அதிர்ச்சி... அறநிலையத்துறைதான் காரணமா?
கோலாகலமாக தொடங்கிய திருத்தேரோட்டம், தெற்கு வீதியில் வலம் வந்து, மேல வீதி சந்திப்பில் திரும்பியபோது அசம்பாவிதம் நிகழ்ந்தது
மயிலாடுதுறையில் பக்தர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்கும் ஏக்கத்திற்கும் விடையளிக்கும் விதமாக 40 வருடத்திற்கு பிறகு நடந்த திருத்தேரோட்டத்தின் போது சக்கரம் உடைந்து அம்மனின் வீதியுலா தடைபட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் உள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயிலில், சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 21-ம் தேதி பூச்சொறிதல் வைபவத்துடன் தொடங்கி 28-ம் தேதி கொடியேற்றம் செய்யப்பட்டு, நேற்று தீமிதி உற்சவமும் நடந்தது. தொடர்ந்து, திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்தது.
பல ஆண்டுகளாக பாரம்பரியாக நடந்து வந்த மகா மாரியம்மன் கோயிலின் தேரோட்டம், 1984-ல் மரச்சட்டங்களால் கோக்கப்பட்டு செய்யப்பட்ட தேர் சிதிலமடைந்து பழுதடைந்ததால் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பக்தர்களின் வலியுறுத்தலால் மீண்டும் தேரோட்டத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதன்படி மரச் சட்டங்களால் தேர் சரிசெய்யப்பட்ட நிலையில், தேரோட்டம் மீண்டும் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீமத் மகா மாரியம்மன் எழுந்தருள செய்யப்பட்டு மகா தீபாராதனையுடன் தேரோட்டம் துவங்கியது. இதனை பெரும் உற்சாகத்துடன் வாத்தியங்கள் முழங்க தேரை வடம் பிடித்து பக்தர்கள் பரவசமாக இழுத்துச்சென்றனர்.
கீழ வீதியிலிருந்து கோலாகலமாக தொடங்கிய திருத்தேரோட்டம், தெற்கு வீதியில் வலம் வந்து, மேல வீதி சந்திப்பில் திரும்பியபோது அதன் முன் சக்கரம் உடைந்து பழுதானது.
இதனை கண்ட பக்தர்கள் நீண்ட கால ஏக்கம் சிறிது நேரம் கூட நீடிக்காதது போல அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்தனர். இதையடுத்து மாற்று ஏற்பாடாக சுவாமி வீதியுலா செல்லும் வாகனத்தில் தேர் போன்ற அலங்காரம் செய்யப்பட்டு சுவாமியை எழுந்தருளச் செய்து தேரோட்டம் நடந்தது. இதனிடையே, புதிய தேரை செய்து தர வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?