சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் -ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Dec 26, 2023 - 14:17
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் -ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோவில் மார்கழி திருமஞ்சன தரிசன விழா கொடியேற்றம் கடந்த 18ம் தேதி நடைபெற்றது.இதில் மேள தாளம் முழங்கிட வேத மந்திரங்கள் ஓதிட, தேவாரம், திருவாசகம் பாடி தீட்சிதர், கோவில் கொடி மரத்தில் கொடியேற்றினர்.இதனைத்தொடர்ந்து தினசரி காலை, மாலை இரு வேளைகளிலும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெற்றது. 
மூலவர்களான ஸ்ரீமந் நடராஜமூர்த்தி, ஸ்ரீசிவகாமசுந்தரி மற்றும் உற்சவர்கள் ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் மேளதாளம் முழங்கிட, வேத மந்திரங்கள் ஓதிட, தனித்தனி தேர்களில் இன்று அதிகாலை எழுந்தருளினர். பின்னர் கீழவீதி தேரடி நிலையிலிருந்து 8 மணிக்கு தேர்கள் புறப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய என கோஷங்களை எழுப்பியவாறு வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். 
தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக இன்று மலை கீழவீதி தேர்நிலையை அடையும். நான்கு வீதிகளிலும் மண்டகபடிதாரர்கள் சுவாமிகளுக்கு சிறப்பு படையல் செய்தனர்.சிவனடியார்கள் மற்றும் திரளான பெண்கள் வீதிகளை நீரினால் கழுவி கோலமிட்டு உழவாரப்பணி மேற்கொண்டனர். சிவனடியார்கள் சிவ நடனம் ஆடியபடி சென்றனர். தேர்களுக்கு முன்பாக பெண்கள் கும்மியடித்து சென்றனர். திருவிளக்கு முன்பு சிவ பக்தர்கள் சிவ வாத்தியங்களை முழங்கி நடனமாடி சென்றனர். 
இதற்கான ஏற்படுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர். ஆனித்திருமஞ்சன தரிசன விழாவையொட்டி சிதம்பரம் நகரில் வெளிநாடு, வெளி மாநில மற்றும் உள்ளூர் பக்தர்கள் குவிந்துள்ளனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow