மாணவர் சேர்க்கை வழங்காமல் இடங்களை காலியாக வைத்திருப்பதா?-சென்னை ஐகோர்ட் கேள்வி

மாணவர் சேர்க்கைக்காக வசூலித்த கட்டணத்தை 2 வாரங்களில் மனுதாரரிடம் பள்ளி நிர்வாகம் திருப்பி செலுத்த வேண்டும்

Dec 26, 2023 - 13:13
Dec 26, 2023 - 14:19
மாணவர் சேர்க்கை வழங்காமல் இடங்களை காலியாக வைத்திருப்பதா?-சென்னை ஐகோர்ட் கேள்வி

வசிப்பிட தூர விதிகளை காரணம் காட்டி மாணவர் சேர்க்கை வழங்காமல் இடங்களை காலியாக வைத்திருப்பது கட்டாய கல்வி உரிமை சட்டம் கொண்டுவரப்பட்டதற்கான நோக்கத்திற்கு எதிராக அமைந்துவிடும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம், வால்பாறையில் வசிக்கும் பட்டியலினத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவர் தன் மகனுக்கு, அங்குள்ள பியூலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி 25 சதவீத ஒதுக்கீட்டில் இடமளிக்கக்கோரி கடந்த 2022 மே மாதம் விண்ணப்பித்துள்ளார்.அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த பள்ளி நிர்வாகம், லட்சுமணனின் வீடு பள்ளியிலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்கு அப்பால் இருப்பதாகக்கூறி, அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது.இதையடுத்து கல்விக் கட்டணத்தை செலுத்தி தன் மகனை எல்.கே.ஜி. வகுப்பில் சேர்த்துள்ளார்.

இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை மறுக்கப்பட்டதை எதிர்த்து லட்சுமணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, பள்ளியின் இருப்பிடம், தூரம் குறித்த விதிகள் கட்டாயமில்லை என்றும், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இடங்கள் காலியாக இருந்தால், நிர்ணயிக்கப்பட்ட தூரத்திற்கு அப்பால் உள்ளவர்களையும் சேர்க்கலாம் என தெளிவுபடுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட 16 இடங்களில் 2022-23 மற்றும் 2023-24ஆம் கல்வியாண்டுகளில் 3 மற்றும் 8 இடங்கள் காலியாக உள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி, காலியிடம் இருக்கும்போது தூர விதிகளை குறிப்பிட்டு, சில இடங்களை காலியாக வைத்திருப்பது என்பது, 6 முதல் 16 வயதானவர்களுக்கு இலவச கல்வியை வழங்குவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டத்தின் நோக்கத்திற்கு எதிராக அமைந்துவிடும் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த பகுதியில் பியூலா மெட்ரிக் பள்ளியை தவிர வேறு பள்ளி ஏதும் இல்லாததால், மனுதாரரின் மகனுக்கு 3 வாரத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென பள்ளி கல்வி துறைக்கு உத்தரவிட்டுள்ளார். எல்.கே.ஜி. மாணவர் சேர்க்கைக்காக வசூலித்த கட்டணத்தை 2 வாரங்களில் மனுதாரரிடம் பள்ளி நிர்வாகம் திருப்பி செலுத்த வேண்டும் என பள்ளி நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow