சென்னையில் ஐடி ஊழியர்களுக்கு கஞ்சா சப்ளை! கால் டாக்ஸி ஓட்டுநரோடு கம்பி எண்ணும் இளம்பெண்

அவர் வெளிமாநிலங்களில் சவாரி ஓட்டிவிட்டு திரும்பும்போது, அங்கிருந்து கஞ்சா கடத்தி வந்து, ஊருக்குள் விற்பனை செய்து வந்தது அம்பலமானது

Apr 25, 2024 - 10:40
Apr 25, 2024 - 10:51
சென்னையில் ஐடி ஊழியர்களுக்கு கஞ்சா சப்ளை! கால் டாக்ஸி ஓட்டுநரோடு கம்பி எண்ணும் இளம்பெண்

சென்னையில், பார்ட் டைமாக ஐடி ஊழியர்களுக்கு கஞ்சா விற்ற கால் டாக்ஸி டிரைவரை, காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், இளம்பெண் ஒருவரும் சிக்கியுள்ளார்... பிஸியான ஐடி ஊழியர்களிடம் இவர் எப்படி பிசினஸ் செய்தார் என்பதைப் பார்க்கலாம்

சென்னை சூளைமேடு சக்தி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், திருமணமாகாத பெண்கள் சிலர் வீடு எடுத்து தங்கி வருகின்றனர். அந்த வீடுகளுக்கு ஆண்கள் அதிகம் வந்து செல்வதாக அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்குப் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் வீடுகளுக்குள் சோதனை மேற்கொண்டபோது, ஒரு வீடு முழுவதும் கஞ்சா நாற்றம் அடித்துள்ளது. இதையடுத்து வீடு முழுவதும் சோதனையிட்டதில், ஒரு பையில் ஒன்றரை கிலோ கஞ்சா இருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அப்போது, அந்த வீட்டில் இருந்த சர்மிளா என்ற பெண்ணிடம் விசாரித்ததில்தான், ஐடி ஊழியர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யும் பிசினஸ் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைத்துள்ளது. 

புதுக்கோட்டையைச் சேர்ந்த சர்மிளா, ஈசிஆரில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். தாய், தந்தை இல்லாமல் தனியாக வசித்து வரும் இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த கால்டாக்ஸி ஓட்டுநரான சுரேஷ் என்பவர் பழக்கமாகியுள்ளார். சர்மிளாவின் மனச் சோர்வைப் போக்க, அவருக்கு கஞ்சா சப்ளை செய்து, தனது நட்பை நெருக்கமாக்கியுள்ளார். அதுவரை ஏரியாவுக்குள் மட்டுமே கஞ்சா சப்ளை செய்துவந்த சுரேஷ், சர்மிளாவுடன் ஏற்பட்ட நட்பை பயன்படுத்தி, ஐடி நிறுவனங்களுக்கும் தனது கால்டாக்ஸியை பயன்படுத்தி கஞ்சாவும் சப்ளை செய்து, தனது பிசினஸை விரிவுபடுத்தியுள்ளார். 

விசாரணையின்போது இந்த தகவலெல்லாம் சர்மிளா மூலம் போலீசாருக்கு கிடைக்க, அடுத்ததாக சுரேஷை வளைத்துப் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் வெளி மாநிலங்களில் சவாரி ஓட்டிவிட்டு திரும்பும்போது, அங்கிருந்து கஞ்சா கடத்தி வந்து, ஊருக்குள் விற்பனை செய்து வந்தது அம்பலமானது. இதனிடையே, ஐடி ஊழியர்களிடம் கஞ்சா விற்பனையை தொடங்கியதில் இருந்து, நல்ல வருமானம் கிடைத்ததால், அதை தொடர்ந்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ள சுரேஷ், தன் தொழிலுக்கும் சர்மிளாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று கற்பூரத்தில் அடிக்காத குறையாயாக சத்தியமும் செய்திருக்கிறார். 

ஆனால், சர்மிளாவின் வீட்டில் எடைபோடும் இயந்திரம் ஒன்றையும் பறிமுதல் செய்த காவல்துறை, கஞ்சா கடத்திய குற்றத்துக்காக சுரேஷையும், அதை பதுக்கி வைத்திருந்த குற்றத்துக்காக சர்மிளாவையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, சிறையில் அடைத்திருக்கின்றனர். 

தவறான தொழிலால் ஓட்டுநர் சிறைக்குச் செல்ல, தவறான சகவாசத்தால் இளம்பெண்ணும் கம்பியெண்ண வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow