பஞ்சாப்பை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல் வெற்றி.. புள்ளிப்பட்டியலிலும் முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ்
இன்றைய ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 28 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தர்மசாலாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே 53-வது லீக் போட்டி இன்று (05-05-2024) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன் சேர்த்தது.
சென்னை அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 43 ரன், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 32 ரன் எடுத்தனர். பஞ்சாப் அணி தரப்பில் ராகுல் சஹார், ஹர்ஷல் படேல் தலா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், சாம் கரண் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
168 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரபசிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர். இந்நிலையில் ஜானி 7 ரன்னிலும், அதைத் தொடர்ந்து ஆடிய ரைலி ரூசோ ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து பிரபசிம்ரன், ஷஷாங்சிங் ஜோடி சேர்ந்து விளையாடினர்.
தொடர்ந்து ஷஷாங் 27 ரன்னிலும், பிரபசிம்ரன் 30 ரன்னிலும் ஆட்டமிழக்க அடுத்தடுத்து களமிறங்கிய கேப்டன் சாம்கரண், ஜித்தேஷ சர்மா உள்ளிட்ட வீரர்களும் சொற்ப ரன்னில் வெளியேறினர். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவரில் 139 ரன் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இதில் சென்னை அணி வீரர்கள் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜித் சிங் தலா 2 விக்கெட்டுகளையும், மிட்செல் சாண்ட்னர், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை ஆடிய 11 போட்டிகளில் 6 போட்டிகளில் தனது வெற்றியை பதிவு செய்துள்ளது.
What's Your Reaction?