கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.. விஷ சாராயம் உயிர்பலி வாங்கிய பின் ஒரு நபர் ஆணையம் அமைத்த முதல்வர் ஸ்டாலின்

விஷ சாராயம் குடித்து 37 பேர் உயிரிழந்த பின்னர் அது குறித்து விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

Jun 20, 2024 - 15:04
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.. விஷ சாராயம் உயிர்பலி வாங்கிய பின் ஒரு நபர் ஆணையம் அமைத்த முதல்வர் ஸ்டாலின்


கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 37 உயிரிழந்த பின்னரே அரசாங்கத்தின் அத்தனை துறைகளும் பரபரக்க ஆரம்பித்துள்ளது. விஷ சாராயம் குடித்து 37 பேர் உயிரிழந்த பின்னர் அது குறித்து விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். 

 கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது. மேலும் உடல்நிலை குறைவால் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சில உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளச்சாராயம் விற்றது தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கு சிபிசிஐக்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணையும் தொடங்கி உள்ளது. கள்ளக்குறிச்சி விஷச்சாராயம்  விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அரசின் அலட்சியப்போக்கே இதற்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். 

இந்த மரணங்களுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.
கள்ளச்சாராய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரவண்குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அம்மாவட்ட காவல் கண்காணிப்பாள சமய்சிங் மீனாவையும் சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த, காவல் துணைக் கண்காணிப்பாளர் தமிழ்செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டி செல்வி, திருக்கோவிலூர், உதவி காவல் ஆய்வாளர் பாரதி மற்றும் அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர்  ஆனந்தன், ஷிவ்சந்திரன், உதவி ஆய்வாளர், காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மனோஜ், காவல் துணை கண்காணிப்பாளர், திருக்கோவிலூர் ஆகியோரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கினை தீர விசாரிக்கவும், தக்க மேல் நடவடிக்கைக்காகவும் உடனடியாக CBCID வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், இனி இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க -  மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. பி.கோகுல்தாஸ் அவர்கள் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்திட உத்தரவிட்டுள்ளேன்.

என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ள கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று. எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் அத்தனையையும் கண்காணித்து வருகிறேன்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவியும் அறிவித்துள்ளேன்.

மாண்புமிகு அமைச்சர்கள் - உள்துறைச் செயலாளர் - காவல்துறை இயக்குநர் உள்ளிட்டோர் நேரில் சென்று நடவடிக்கைகளைக் கண்காணிக்கின்றனர். இனி இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க -  மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. பி.கோகுல்தாஸ் அவர்கள் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்திட உத்தரவிட்டுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், கருணாபுரம் காலனியில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் 34 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன்.

இச்சம்பவத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, ஆறுதல் தெரிவிக்க மாண்புமிகு நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு மற்றும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து,மீண்டும் இன்று அவர்களுடன் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களும் கள்ளக்குறிச்சிக்குச் சென்றுள்ளார்.

இதுவரை இச்சம்பவத்தில் விஷச்சாராய விற்பனையில் தொடர்புடைய நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதில் தீவிர விசாரணை மேற்கொண்டு, குறிப்பாக விஷச்சாராயம் தயாரிக்க மெத்தனாலை வழங்கியவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இச்சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட காவல் துறை அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். மேலும் இது குறித்துத் தீர விசாரிக்கவும், உரிய மேல்நடவடிக்கை எடுக்கும் பொருட்டும், இவ்வழக்கு CBCID வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து இலட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இச்சம்பவம் தொடர்பாக,இன்று, அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல் துறை இயக்குநர், கூடுதல் காவல்துறை இயக்குநர் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு), மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அலுவலர்கள், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அலுவலர்களுடன் கலந்தாலோசித்து, கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமென்று நான் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மெத்தனால் கலந்த விஷச்சாராய உற்பத்தியிலும், விற்பனையிலும் ஈடுபட்ட அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்படவேண்டுமென்றும்
சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள மெத்தனால் இருப்பை முழுமையாகக் கண்டறிந்து, அவற்றைக் கைப்பற்றி அழித்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளேன்.மேலும், விஷச்சாராய உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட மெத்தனால் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பதற்கான மூலகாரணத்தையும் காவல் துறையினர் கண்டுபிடிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையைப் பொறுத்தவரையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சேலம் மற்றும் விழுப்புரம் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்ட வேண்டுமென்றும், அங்கு அவர்களுக்குத் தேவையான சிறப்பு சிகிச்சை வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளேன். உள்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் காவல் துறை இயக்குநர் ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உடனடியாகச் சென்று, சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றினை இரண்டு தினங்களில் வழங்குவார்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொண்டு, இது நிகழ்ந்ததற்கான அனைத்துக் காரணிகளைக் கண்டறியவும், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிடவும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.பி.கோகுல்தாஸ் அவர்கள் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்திட உத்தரவிட்டுள்ளேன். இந்த ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிரச்சினை வரும் முன்பாக தடுக்க வேண்டும் என்பது வள்ளுவர் வாக்கு. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டே கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்ந்த போது தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது இத்தனை உயிர்கள் பறிபோயிருக்காது. கள்ளச்சாராயத்திற்கு 35க்கும் மேற்பட்ட உயிர்களை காவு கொடுத்த பின்னர் ஒருநபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டுள்ளார் முதல்வர் என்பதே எதிர்கட்சியினரின் ஆதங்கமாக உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow