பிரதமர் மோடி குறித்து அவதூறு.. நவாஸ் கனி ஆதரவாளர்கள் மீது ஓ.பி.எஸ் வழக்கறிஞர் புகார்…
பிரதமர் மோடி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக ராமநாதபுரத்தில் திமுக கூட்டணியில் போட்டியிடும் நவாஸ் கனியின் ஆதரவாளர்கள் மீது, பாஜக கூட்டணியில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வத்தின் வழக்கறிஞர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக நவாஸ் கனி போட்டியிடுகிறார். இந்நிலையில், அவரது ஆதரவாளர்கள் சிலர், காங்கிரஸ் கட்சியினர் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது குறித்து பிரதமர் மோடி பேசியதாக தனியார் தொலைக்காட்சியில் வந்த செய்தியை, ராமநாதபுரம் ராவணனின் பூமியாக மாறிவிட்டதால், தான் அங்கு போட்டியிடவில்லை என கூறியதாக தவறாக திரித்து, சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்துள்ளனர்.
இது ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வத்தை தோல்வி அடையச் செய்யும் நோக்கிலும், ராமநாதபுரம் தொகுதி வாக்காளர்களை கொச்சைப்படுத்தும் வகையிலும் இந்த அவதூறு கருத்துகளை பரப்பி வருவதாக ஓ.பன்னீர் செல்வத்தின் வழக்கறிஞர் சந்திரசேகரன், தேர்தல் ஆணையத்தில் மின்னஞ்சல் மூலமாக புகார் அளித்துள்ளார்.
மேலும், ராமநாதபுரம் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான விஷ்ணு சந்திரன் மற்றும் தேர்தல் பார்வையாளர் பண்டாரி யாதவ் ஆகியோரிடம் தொலைபேசி வாயிலாகவும் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் அவதூறு கருத்துகளை பரப்பும் நவாஸ் கனியின் ஆதரவாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவதூறு கருத்துகள் பரப்பப்படுவதை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
What's Your Reaction?