வடசென்னை மக்களுக்காக 5 வருஷமா என்ன செய்தார் கலாநிதி வீராசாமி? - அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ
வடசென்னை தொகுதி எம்.பி.யான கலாநிதி வீராசாமி கடந்த ஐந்து வருடங்களாக தொகுதிக்கு எந்தவொரு நல்ல திட்டங்களையும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ, மீண்டும் வெற்றி பெறுவேன் என்ற அவரது பகல் கனவு பலிக்காது என விமர்சித்திருக்கிறார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வடசென்னையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவுக்கு ஆதரவாக அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் தண்டையார்பேட்டையில் உள்ள நேதாஜி நகரில் பிரசாரம் மேற்கொண்டார். அங்குள்ள கோயிலுக்கு சென்ற ராயபுரம் மனோவுக்கு மாலை அணிவித்து சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்த பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் இரட்டை இலைக்கு வாக்களிக்க கோரி துண்டு பிரசுரங்களை விநியோகித்தார்.
அப்போது எம்.ஜி.ஆர். வேடமிட்ட நபர் மற்றும் நடன கலைஞர்களுடன் இணைந்து மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் நடனமாடி வாக்கு சேகரித்தது அங்கிருந்தவர்களை கவர்ந்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராயபுரம் மனோ, திமுக - பாஜக அரசுகள் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால் தனது வெற்றி என்பது மக்களால் உறுதி செய்யப்பட்டதுள்ளாக கூறினார். வடசென்னை தொகுதியில் ஏற்கனவே வெற்றி பெற்ற திமுக உறுப்பினர் கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்களுக்கு எவ்வித பணிகளையும் செய்யாததால் மக்கள் கோபத்தில் உள்ளனர், அதனால் மீண்டும் வெற்றி பெறுவேன் என்ற அவரது பகல் கனவு பலிக்காது என்றும் ராயபுரம் மனோ விமர்சித்தார்.
விலைவாசி உயர்வால், மக்களை மத்திய - மாநில அரசுகள் வஞ்சிப்பதாக குற்றம்சாட்டிய ராயபுரம் மனோ, மக்கள் மவுன புரட்சி மூலம் இரட்டை இலைக்கு பெரிய வெற்றியை வழங்கி எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுதுவார்கள் என்றும் நம்பிக்கையாக தெரிவித்தார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் ஒரு சேவகனாக இருந்து தென்சென்னைக்கு நிகராக வடசென்னையை முன்மாதிரி தொகுதியாக மாற்றி காட்டுவேன் என்று அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ உறுதியளித்தார்.
What's Your Reaction?