9,175 நெல் மூட்டைகள் மாயம்! நாடகமாடிய வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம்.. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
தஞ்சையில் நெல் மூட்டைகளை அடமானம் வைத்து கடன்பெற்ற விவசாயிகள் அதனை வட்டியுடன் திரும்ப செலுத்திய நிலையில், நெல் மூட்டைகளை திரும்ப விவசாயிகளிடம் வழங்காமல் நாடகமாடிய வழக்கில் , கும்பகோணம் ஐடிபிஐ வங்கி கிளைக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கும்பகோணத்தை சேர்ந்த விவசாயிகளான பரஞ்சோதி, தேவி மற்றும் சூரியகுமாரி ஆகிய மூவரும் தங்களுக்கு சொந்தமான 130 ஏக்கர் மற்றும் குத்தகை சாகுபடி மூலம் 400 ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். இப்படி கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறுவடை செய்யப்பட்ட 9,175 நெல் மூட்டைகளை அடமானமாக வைத்து கும்பகோணம் ஐடிபிஐ வங்கி கிளையில் ரூபாய் ஒரு கோடியே 45 லட்சம் கடன் பெற்றதாக சொல்லப்படுகிறது. இந்த நெல் மூட்டைகள் அனைத்தும், வங்கியின் அங்கீகாரம் பெற்ற ஸ்டார் அக்ரி நிறுவனத்தின் புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டியில் உள்ள கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், 11 மாத கால இடைவெளியில், கடன் தொகையினை வட்டியுடன் முழுமையாக செலுத்திய பின், நெல் மூட்டைகளை எடுப்பதற்கான ஆணையுடன் புதுக்கோட்டை கிடங்கிற்கு சென்று பார்த்த போது, அங்கு மூட்டைகள் இல்லாததால் சம்மந்தப்பட்ட மூன்று விவசாயிகளும் அதிர்ச்சியடைந்தனர்.
இது தொடர்பாக ஐடிபிஐ வங்கி நிர்வாகம் மற்றும் ஸ்டார் அக்ரி நிறுவனத்திடம் கேட்ட போது முறையாக பதிலளிக்காமல் அலைக்கழித்துள்ளனர். ஒரு கட்டத்தில் சம்மந்தப்பட்ட விவசாயிகளிடம் 9,175 நெல் மூட்டைகளையும் டெலிவரி செய்துவிட்டதாக தெரிவித்ததோடு, டெலிவரி செய்தமைக்கான ஆவணங்களையும் அந்நிறுவனம் வழங்க மறுத்துள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் அளித்த புகாரின் பேரில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நூதன மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் மீதான உத்தரவின்பேரில், தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி முறையிடப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு குறித்த விசாரணையில், கடனை வட்டியுடன் முழுமையாக செலுத்திய பிறகும் நெல் மூட்டைகளை சம்மந்தப்பட்ட 3 விவசாயிகளுக்கு, ஐடிபிஐ வங்கி திருப்பி வழங்காதது விவசாயிகள் தரப்பில் நிரூபிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, ஆணைய தலைவர் மோகன்தாஸ், இவ்வழக்கில் தொடர்புடைய ஐடிபிஐ வங்கி கும்பகோணம் கிளை, விவசாயிகளுக்கு மூவரும் சொந்தமான 9,175 நெல் மூட்டைகளையும் உடனடியாக முறைப்படி ஒப்படைக்க வேண்டும் தவறினால், 45 தினங்களுக்குள் அதற்கு இழப்பீடாக ரூபாய் ஒரு கோடியை கடந்த 19.09.2019 முதல் இழப்பீடு வழங்கும் நாள் வரை 12 சதவீத வட்டியுடன் வழங்குவதுடன், சம்மந்தப்பட்ட விவசாயிகளுக்கு மன உளைச்சளை ஏற்படுத்தியமைக்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடும், வழக்கு செலவிற்காக ரூபாய் ஒரு லட்சமும் வழங்கிட உத்தரவிட்டார்.
45 தினங்களை கடந்து இழப்பீடு வழங்காத பட்சத்தில் அந்த வட்டியை 14 சதவீதமாக அதிகரித்து இழப்பீடு வழங்கும் நாள் வரை வழங்கிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் நெல் மூட்டைகளை வைத்து அடமான கடன் பெற்று, அதனை முழுமையாக முறையாக உரிய காலத்தில் திரும்பி செலுத்திய போதும், நெல் மூட்டைகளை திரும்ப வழங்காமல், மோசடியாக அதனை விற்பனை செய்தது அம்பலமாகி வங்கி வாடிக்கையாளர்களையும், பொது மக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
What's Your Reaction?