அமைச்சர் மூர்த்தியுடன் தொடர்பு: பதவிக்கு பணம் : மதுரை தவெக மாவட்ட செயலாளர் மீது அடுக்கடுக்கான புகார்
அமைச்சர் மூர்த்தியுடன் ரகசிய தொடர்பு, கட்சி பதவி தர வசூல் வேட்டை என மதுரை தவெக மாவட்ட செயலாளர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை அம்மாவட்ட நிர்வாகிகள் முன்வைத்து, அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூவர் மாவட்ட செயலாளர் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக கூறி தவெக தலைமை அலுவலகத்தில் அம்மாவட்ட நிர்வாகிகள் முற்றுகை போராட்டம் நடத்தி இருந்தனர். இதே போன்று நேற்றைய தினம் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவி தொடர்பாக அம்மாவட்ட அதிருப்தி நிர்வாகிகள் விஜய் காரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி இருந்தனர்.
இந்தநிலையில், மதுரை வடக்கு மாவட்ட தவெக செயலாளரை நீக்க கோரி, அக்கட்சியின் மகளிர் அணியினர், இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் கல்லாணை. இவரை பதவி நீக்க கோரி மதுரை தபால் தந்தி நகரில் மகளிர் அணியை சேர்ந்த சத்யா தலைமையில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘மதுரை வடக்கு மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளர் கல்லாணை, மக்கள் பணிக்கு என கூறி தவெகவினரிடம் ரூ.50 லட்சம் வரை பணம் வசூலித்துள்ளார். வட்ட செயலாளர் பதவிக்கு ரூ.5 லட்சம் வரை வசூலிக்கிறார்.
பெண்களின் உடல் பருமனை காட்டி ஏளனமாக பேசி வருகிறார். மதுரையில் மன்னராட்சி முறையில் தவெகவினர் கட்சியை செயல்படுத்தி வருகின்றனர். விஜய் பிறந்தநாளை மகளிர் அணியினர் கொண்டாடினர். அந்த பிறந்த நாளுக்கு பிரியாணி வழங்க வேண்டும் என மாவட்ட செயலாளர் கல்லாணை வற்புறுத்தி பணம் வசூலித்தார். பதவி வழங்க ஜாதி பார்க்கின்றனர். சமீபத்தில் 12 மகளிர் அணி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதில் யாருமே களப்பணி செய்தவர்கள் அல்ல. பணம் வசூலித்து கொண்டு பதவியை வழங்கியுள்ளனர்.
அதுமட்டுமின்றி திமுக அமைச்சர் மூர்த்தியுடன் ரகசிய தொடர்பில் இருக்கிறார். அவரிடம் இருந்து மாதந்தோறும் கல்லணை பணம் பெற்று வருகிறார். எனவே, மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து கல்லாணை நீக்க வேண்டும்’ என்றனர்.
திருவள்ளூர், தூத்துக்குடியை தொடர்ந்து மதுரை மாவட்ட தவெக நிர்வாகிகளும் தலைமை எதிராக போர்க்கொடி உயர்த்தி இருப்பது தவெகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?

