கோர்ட் அவமதிப்பு.. வக்பு வாரிய தலைவரை கிடுக்கிப்பிடி கேள்வி கேட்ட ஹைகோர்ட் நீதிபதிகள்
நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாத தூத்துக்குடி வக்பு வாரிய தலைவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில், விசாரணை மேற்கொண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், புதிய மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இஸ்லாமியர்கள் சமூக மற்றும் பொருளாதார பணிகளுக்காக வக்பு வாரியத்தை அமைத்துள்ளனர். இதன்மூலம் பல நலத்திட்டங்கள் செய்யப்பட்டு வருகின்றன. வக்பு வாரியம் தமிழக அரசின் சிறுபான்மை நலத்துறையின் கீழ் செயல்பட்டு வருவது குறிப்பிடதக்கது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டணம் மஜ்லிஸுல் புஹாரிஷ் ஷரீபு பள்ளிவாசல் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கீழ் அங்கீகரிக்கபட்டதாகும். இதன் நிர்வாக பொறுப்பாளர்கள் ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட அந்த பகுதியை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நிர்வகித்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட குழுவினர் பாரம்பரியமாக தேர்ந்தெடுக்கப்பட்ட முறையினை எதிர்த்து ரகசிய வாக்கு மூலம் பெற்று நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த முஹம்மது இஸ்மாயில் என்பவர் மூலம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதனடிப்படையில் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம், வழக்கை விசாரித்த தனி நீதிபதி தேர்தல் நடத்த உத்தரவிட்டார். அதனை எதிர்த்து நிர்வாகிகள் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இதனை விசாரணை செய்த நீதிபதிகள் ஆர். சுரேஷ் குமார் மற்றும் அருள் முருகன், பள்ளிவாசலுக்கு உட்பட்ட எல்லை வரையறை, வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் போன்ற ஆட்சேபனையினை கருத்தில் கொண்டு தனி நீதிபதி வழங்கிய ஆணைக்கு இடைக்கால தடை விதித்து ஆட்சேபனைகள் அனைத்தையும் முறைப்படி விசாரணை செய்து சரி செய்த பின்னர் தேர்தல் நடத்த உத்தரவிட்டனர்.
ஆனால் நீதிமன்ற உத்தரவை கருத்தில் கொள்ளாமல் வக்பு வாரியம் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அன்று தேர்தல் நடத்தினர். எனவே நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்றாமல் தேர்தல் நடத்திய தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துர் ரஹ்மான், வக்பு முதன்மை செயல் அலுவலர் ஜைய்னுல் ஆப்தீன், திருநெல்வேலி வக்பு கண்காணிப்பாளர் ஷேக் அப்துல்லாஹ் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட வேண்டும் என மனு தாக்கல் செய்ய்யப்பட்டிருந்தது.
இதுதொடர்பான விசாரணையின் போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள் நேரில் ஆஜராகினர். அப்போது நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாதது ஏன் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வாரிய தலைவர், தேர்தல் முறைப்படி நடத்தப்பட்டு உள்ளது, அதனை வக்பு வாரியம் அங்கீகரித்து உள்ளது என்றும் தெரிவித்தார். அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் நீதிமன்ற உத்தரவிற்கு முரணாக நடைபெற்ற தேர்தலை ரத்து செய்யக்கோரி மனுதாரர் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்ய வேண்டும், அந்த மனுவையும் சேர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கோடு விசாரிப்பதாக கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
What's Your Reaction?