எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வழக்கு - நாளை உத்தரவு பிறப்பிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்...

அதிமுக இரண்டு அணிகளாக உள்ளதா?. அதனால்தான் இருதரப்பும் அதிமுக-வை உரிமை கோருகிறீர்களா? - நீதிபதி கேள்வி

Mar 14, 2024 - 13:13
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வழக்கு - நாளை உத்தரவு பிறப்பிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்...

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது.  

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக பெயர் மற்றும் சின்னத்தை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது மற்றும் தேர்தலுக்கான வேட்பாளர் மனுவில் பொதுச்செயலாளர் என அவர் கையெழுத்திட அனுமதிக்க கூடாது உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த மனுக்கள் மீது தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் மனுக்கள் மீது  நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு சச்சின் தத்தா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக இரண்டு அணிகளாக உள்ளதா? எனவும் அதனால்தான் இருதரப்பும் அதிமுக-வை உரிமை கோருகிறீர்களா? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், அதிமுக என்பது ஒரே அணி. எந்த அணிகளும் அதிமுகவுக்கு இல்லை என விளக்கம் அளித்தார். மேலும், அதிமுக-வின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழு எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்துள்ளது எனவும் பெரும்பான்மை அடிப்படையில் அதிமுக ஒரே அணி என்பதை தேர்தல் ஆணையம் ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாகவும் அவர் கூறினார். அதிமுக கட்சிக்கோ, சின்னத்துக்கோ எந்த பிரச்னையும் இல்லை. புகழேந்தி அதிமுக உறுப்பினரே கிடையாது. கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். அதனால், இந்த விவகாரத்தில் புகழேந்தி வருவதற்கு எந்த உரிமையும் இல்லை என வாதிட்டார். 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி,  வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow