ஒருதலைக் காதல்... மாணவி கொலை... குற்றவாளிக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...
சென்னையில் ஒருதலைக் காதலை ஒப்புக்கொள்ளாததால் கல்லூரி வாயிலில் மாணவியை குத்திக் கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை மதுரவாயலைச் சேர்ந்த அஸ்விணி என்ற மாணவி, கே.கே.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த அழகேசன் என்பவர் அஸ்வினியை ஒருதலையாக காதலித்து வந்த நிலையில், அவரை பின்தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் தெரிகிறது.
இதனால் கோவமடைந்த அஸ்வினி, புகார் அளித்ததன் அடிப்படையில் அழகேசனை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து ஜாமினில் வெளியே வந்த அழகேசன், கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் கல்லூரி வாயிலில் வைத்து அஸ்வினியை கத்தியால் கொடூரமாகக் குத்தினார். தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட அஸ்வினியை அங்குள்ளவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் அவர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே அஸ்வினியை கத்தியால் குத்திய அழகேசனை அக்கம் பக்கத்தினர் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கே.கே.நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை, சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி T.H.முகமது ஃபாரூக் விசாரித்து வந்தார்.5 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில், அழகேசன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படுள்ளதாக கூறி, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். மேலும், ரூ.10,500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு நிதியத்திலிருந்து அஸ்வினியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக்குழுவுக்கு நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.
What's Your Reaction?