நியோமேக்ஸ் வழக்கு விசாரணையில் திருப்தி இல்லை.. நீதிபதி காட்டம்

Mar 21, 2024 - 17:33
நியோமேக்ஸ் வழக்கு விசாரணையில் திருப்தி இல்லை.. நீதிபதி காட்டம்

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையின் விசாரணை குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது.

நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி ரூ.6,000 கோடி வரை பெற்று ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் அதன் இயக்குநர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, "இந்த மோசடி வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை எந்த வேலையும் செய்ததாக தெரியவில்லை. இத்தனை மாதங்களாகியும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை நடவடிக்கைகளில் திருப்தி இல்லை. இப்படியே சென்றால் வழக்கை விசாரிக்க தனிவிசாரணை அமைப்பை உருவாக்க நேரிடும்" என எச்சரித்தார்.

"பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் 15 - 30 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். நிதி நிறுவன மோசடி வழக்குகளை கையாள ஒற்றைச் சாளர முறையை ஏற்படுத்த வேண்டும். நிதி நிறுவன மோசடி வழக்குகள் நீர்த்துப்போவதை தடுக்க வழிகாட்டுதல்களை ஏற்படுத்தினால் விசாரணை வேகமாக நடைபெறும்" என நீதிபதி அறிவுறுத்தினார்.

மேலும் நியோமேக்ஸ் வழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை திருப்பி வழங்குவது குறித்து உள்துறை செயலாளர், பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி ஆகியோர் இணைந்து  நிறுவனத்திடம் இருந்து கைப்பற்றிய  சொத்துக்களை ஆவணப்படுத்தி முதலீட்டாளர்களுக்கு வழங்குவது மற்றும் நீதிமன்ற வழக்குகளை கையாள்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள எத்தனை நாட்கள் தேவைப்படும் என்பது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow