நெல்லையில் கூலி உயர்வு கேட்டு கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் நடத்திய தொழிலாளர்கள்
போராட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்
நெல்லையில் கூலி உயர்வு கேட்டு பித்தளை பாத்திர தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டம், பழைய பேட்டை டவுண், பேட்டை பகுயிதில் சுமார் 25க்கும் மேற்பட்ட பித்தளை பாத்திரம் உற்பத்தி செய்யும் பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 120க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 25 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் பிஎஃப், இஎஸ்ஐ மற்றும் சட்ட சலுகைகள் எதுவும் கிடையாது. தங்களுக்கு ஊதிய உயர்வு வேண்டும் என்று கூறி 2016 ஆம் ஆண்டில் 45 நாட்கள் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருநெல்வேலி தொழிலாளர் துறை துணை ஆணையாளர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய கூலி உயர்வு வழங்கிட வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டன.
ஆனால் தற்பொழுது கூலி உயர்வு ஏதும் அவர்களுக்கு கொடுக்கவில்லை என்றும் தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய கூலி உயர்வை பாத்திர வியாபாரிகளிடம் பெற்றுக்கொண்டு தொழிலாளருக்கு கொடுக்க மறுத்து வருகிறார்கள் என்று கூறி பித்தளை பாத்திர தொழிலாளர்கள் கடந்த ஒரு வாரமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தின் உச்சகட்டமாக இன்று தங்களுக்கு வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு தாங்கள் உண்ண உணவு கூட இல்லாத ஒரு நிலையில் இருப்பதாக கூறி கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அரசு உடனடியாக தலையிட்டு பாத்திர உற்பத்தியாளர்களிடம் கலந்து பேசி தங்களுக்கு உரிய சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கேட்டுக்கொண்டனர்.
What's Your Reaction?