பெண் குழந்தை பெற்றதால் ஓட்டு போட கூட அனுமதியில்லை - அதிமுக எம்.எல்.ஏ மீது பகீர் குற்றச்சாட்டு

Feb 21, 2024 - 22:02
Feb 21, 2024 - 22:03
பெண் குழந்தை பெற்றதால் ஓட்டு போட கூட அனுமதியில்லை - அதிமுக எம்.எல்.ஏ மீது பகீர் குற்றச்சாட்டு

ஆயிரம் சவரன் தங்கம், 10 கோடி ரூபாய் ரொக்கம், கொடுக்காத மருமகளுக்கு ஓட்டு போட கூட அனுமதியில்லை என்று தடுத்து கொடுமை செய்ததாக மக்கள் பிரதிநிதியாக இருந்த ஒருவர் மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது. அது வேறு யாருமல்ல.. அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தற்போது சென்னை புறநகர் மாவட்ட செயலாளருமாகவும் இருந்து வரும் கே.பி.கந்தன் மீது தான் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை அம்பத்தூரை அடுத்த புதூர் பானுநகர் பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர் தான் ஆவடி காவல் ஆணையரகத்தில் கே.பி.கந்தன் மீது இந்த புகாரை கொடுத்துள்ளார். ஸ்ரீகாந்த் அளித்த புகாரில், தாம் மரக்கடை வைத்து வியாபாரம் செய்து வரும் நிலையில், தனது மகள் மருத்துவர் சுருதி பிரியதர்ஷினிக்கும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி. கந்தனின் மகன் சதீஷ் குமாருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருமண பேச்சுவார்த்தையின் போது கே.பி.கந்தன் குடும்பத்தினர், அம்பானியே வியக்கும் அளவுக்கு ஒரு வரதட்சணை  பட்டியலை தன்னிடம் வழங்கியதாக கூறியுள்ள ஸ்ரீகாந்த், ஐடிசி சோலா ஓட்டலில் தான் நிச்சயதார்த்தம் நடத்த வேண்டும் என்றும், நிச்சயதார்த்தத்திற்கு மாப்பிள்ளைக்கு ரேடோ வாட்ச், வைர பிரேஸ்லட், வைர மோதிரம் போட வேண்டும் என்று கன்டிஷன் போட்டதாகவும் கூறியிருக்கிறார்.

சதீஷ்குமார் - சுருதி பிரியதர்ஷினி திருமண நிகழ்ச்சியில் கேபி கந்தன்

திருமணத்திற்கு ஆயிரம் சவரன் தங்க நகை மனப்பெண்ணுக்கும், 100 சவரன் தங்க நகை மாப்பிள்ளைக்கும் போட வேண்டும்  என்று கே.பி.கந்தன் குடும்பத்தினர் வரதட்சணையாக கேட்டதையும் கமிஷ்னர் ஆலுவலகத்தில் அளித்த புகாரில் பட்டியலிட்டு இருக்கிறார் கே.பி.கந்தனின் சம்பந்தியான ஸ்ரீகாந்த். ஒரு வழியாக பேசி முடித்து 600 சவரன் தங்க நகை, 20 கிலோ வெள்ளி, ஆடி, பி.எம்.டபிள்யூ சொகுசு கார் என வரதட்சணை பட்டியலை ஓரளவு சமன் செய்து சுருதி -  சதீஷ்குமார் திருமணம் முடித்து வைக்கப்பட்டது என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் முடிந்து இரண்டு வருடம் சதீஷ்குமார் - சுருதி பிரியதர்ஷினியும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த அவ்வப்போது வரதட்சணை குறைக்கப்பட்டது குறித்த கே.பி.கந்தனின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் குத்திக்காட்டியதாக கூறுகிறார் பாதிக்கப்பட்ட சுருதி. ஆண்டொன்று ஓட 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம்  சுருதி - சதீஷ் தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஆண் குழந்தை பிறக்கும் என எதிர்ப்பார்பில் இருந்த கே.பி.கந்தன் குடும்பத்தினருக்கு இது ஏமாற்றம் அளித்த நிலையில் ஏற்கெனவே வரதட்சணை கொடுமையுடன் சேர்த்து பெண் குழந்தை பெற்றெடுத்ததை சுட்டிக்காட்டி தன்னை கொடுமைப்படுத்துவதை மேலும் அதிகரித்ததாகவும், ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளவும் முயன்றதாகவும் தனது வேதனையை பகிர்ந்து கொண்ட சுருதி, அப்போது ஏற்பட்ட காயத்தை சரிசெய்ய கூட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்காமல் வீட்டிலேயே அடைத்து வைத்து சித்தரவதை செய்ததாகவும், பெண் குழந்தை பெற்றெடுத்ததால் தன்னை ஓட்டு போட கூட அனுமதிக்கவில்லை என்று கே.பி.கந்தன் மீது புகார் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் கொடுமை தாங்காமல் பிரிந்து தாய்வீட்டுக்கு திரும்பிய தனது மகளை மீண்டும் கணவனுடன் சேர்த்து வைக்க முயற்சித்த நிலையில் கூடுதலாக வரதட்சைணை கொடுத்தால் மட்டுமே பெண்ணுக்கு வாழ்க்கை என்று கே.பி.கந்தன் குடும்பத்தார் கூறிவிட்ட நிலையில் தற்போது, கே.பி.கந்தன், அவரது மனைவி கே.பி.கே.சந்திரா, மகய் கே.பி.கே.இந்துமதி, மகன் கே.பி.கே சதீஷ்குமார் ஆகியோர், தனது மகளை அடித்து துன்புறுத்தி, வீட்டை விட்டு வெளியே துரத்தியதோடு மட்டுமல்லாமல், தற்கொலைக்கு செல்லும் அளவுக்கு குடும்பத்துடன் சேர்ந்து கொடுமைப்படுத்தியதாகவும் சுருதியின் தந்தை ஸ்ரீகாந்த் ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து இருக்கிறார்.

முன்னாள் மக்கள் பிரதிநிதி, அரசியல் வரலாற்றில் தனிப்பெரும் பெண்  ஆளுமை ஜெயலலிதா இருந்த கட்சியில் முக்கிய பொருப்பில் இருக்கும் ஒருவர் மீது பெண்ணை கொடுமைப்படுத்தியதாக எழுதிருக்கும் புகார் அரசியல் வட்டாரத்தில் சற்று சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எது எப்படியோ ஆளும் கட்சியோ எதிர்க்கட்சியோ பாரபட்சம் பார்க்காமல் யார் குற்றம் செய்திருந்தாலும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது...

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow