திமுக, அதிமுக வேண்டாம்; இதுதான் பாஜக நிலைபாடு - அண்ணாமலை ஆவேசம்

Feb 21, 2024 - 22:13
திமுக, அதிமுக வேண்டாம்; இதுதான் பாஜக நிலைபாடு - அண்ணாமலை ஆவேசம்

தமிழ்நாட்டில் திமுகவும், அதிமுகவும் வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் பாஜக உறுதியாக உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் "என் மண் என் மக்கள்" என்ற நடைபயணத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வருகிறார். அதன்படி என் மண் என் மக்கள் நடைபயணத்தின் 100-வது நாள், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அண்ணாமலைக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் திமுகவும், அதிமுகவும் வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் பாஜக உள்ளதாக உறுதிப்பட தெரிவித்தார். தமிழ்நாட்டில் 11 அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு அமைச்சர் சிறையில் உள்ளார். மற்றொருவர் எப்போது வேண்டுமானாலும் சிறைக்கு செல்லும் நிலையில் உள்ளதாக கூறினார். தமிழகத்தை கடன்கார மாநிலமாக திமுக மாற்றி உள்ளதாகவும், தமிழ்நாட்டின் கடன் 8 லட்சத்து 23 ஆயிரம் கோடியாக உள்ளது என்றார். 

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, பாஜக ஆட்சிக்கு வந்தால் கள்ளுக்கடைகளை நிச்சயம் திறக்கும், 3 ஆண்டுகளில் டாஸ்மாக் முழுவதுமாக மூடப்பட வேண்டும் என்பதில்  பாஜக உறுதியாக இருக்கும் என்றார். மேலும் தரமான கல்வி எட்டாக்கனியாக உள்ளதாக கூறிய அண்ணாமலை, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 2 நவோதயா பள்ளி கொண்டு வருவோம், அதற்கு காமராஜர் பள்ளி என்று பெயரை வைப்போம் என்றார். 

காவல்துறையை திமுக ஏவல் துறையாக பயன்படுத்தி வருகிறது என்று குறிப்பிட்ட அவர், பாஜக ஆட்சிக்கு வந்தால் காவல்துறையை மறுசீரமைப்போம், காவல்துறையின் சம்பளத்தை இரட்டிப்பாக்குவோம் என்று குறிப்பிட்டார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow