எடப்பாடி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

எந்த பயமும் இன்றி நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுறுத்தும் படி உத்தரவு

Dec 15, 2023 - 15:00
Dec 15, 2023 - 17:45
எடப்பாடி  நேரில் ஆஜராக  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சட்டம் அனைவருக்கும் சமம் என்பதால், கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019ஆம் ஆண்டு தற்போது அதிமுக பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், பாதுகாப்பு காரணமாக தமது வீட்டில் சாட்சியத்தை பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமெனவும் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம், நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்ததோடு, அவரது வீட்டில் சாட்சியம் அளிக்க ஏதுவாக வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலனை நியமித்தது.இந்த உத்தரவை எதிர்த்து பத்திரிக்கையாளர் மேத்யூ சாமுவேல் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் இன்று (டிச.15) மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது நீதிபதிகள், கடந்தமுறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது எடப்பாடிக்கு விலக்கு அளிக்க முடியாது என நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பில் எந்த பதிலும் அளிக்கவில்லை.சட்டம் இங்கே அனைவருக்கும் சமமானது. அதை யாருக்காகவும் மாற்றமுடியாது. 

நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்.பாதுகாப்பு என்ற ஒற்றை காரணத்திற்காக மட்டும் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க விலக்கு அளிக்க முடியாது. சென்னை உயர்நீதிமன்றம் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் செயல்பட்டு வருகிறது. உரிய அடையாள அட்டை இல்லாத எவரும் நீதிமன்றத்தின் உள்ளே வர முடியாது.அதனால், எந்த பயமும் இன்றி நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுறுத்தும் படி அவரது தரப்பு வழக்கறிஞருக்கு தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜனவரி 03ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow