அப்படி எல்லாம் செய்ய முடியாது... செந்தில்பாலாஜி மனுவை அவசர வழக்காக ஏற்க மறுத்தது உயர்நீதிமன்றம்
ஜாமின் மனு விசாரணையை 21-ம் தேதி விசாரிக்க ஒப்புதல் அளித்தார்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை விசாரணையில் இருந்து விலக்களிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று நீதிபதிகள் மறுத்துள்ளனர்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தரப் பணம் பெற்றதாக செந்தில்பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்தநிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜி, கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட 3 பிரதான வழக்குகளின் விசாரணை முடியும் வரை அமலாக்கத்துறை விசாரணையில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி அல்லி, மனுவைத் தள்ளுபடி செய்தார்.
இதை எதிர்த்து, செந்தில்பாலாஜி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முறையிடப்பட்டது. இதை நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு விசாரித்தபோது, மறு ஆய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்காவிட்டால் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுவிடும் என்று செந்தில்பாலாஜி தரப்பில் முறையிடப்பட்டது.
இதில் விவாதங்களை கேட்ட நீதிபதிகள், வழக்கமான பட்டியலில் மனு பட்டியலிடப்படும் என்று கூறி, அவசர வழக்காக ஏற்க மறுத்தனர். அதே சமயம் செந்தில்பாலாஜியின் ஜாமின் மனுவை பிப்ரவரி 19-ம் தேதிக்கு பதில் 21-ம் தேதி விசாரிக்க வேண்டும் என்று முறையிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஜாமின் மனு விசாரணையை 21-ம் தேதி விசாரிக்க ஒப்புதல் அளித்தார்.
What's Your Reaction?