பொங்கல் தொகுப்புக்கு பாகுபாடின்றி கரும்புகள் கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் மறியல்

எந்தவித பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளிடமும் தலா 2500 கரும்புகளுக்கு குறையாமல் கொள்முதல் செய்யவேண்டும்

Jan 9, 2024 - 12:39
Jan 9, 2024 - 23:19
பொங்கல் தொகுப்புக்கு பாகுபாடின்றி கரும்புகள் கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் மறியல்

சீர்காழி அருகே பாகுபாடின்றி பொங்கல் தொகுப்பு கரும்புகள் கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே அல்லிவிளாகம், செம்பதனிருப்பு, ராதாநல்லூர், ஆலங்காடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கரில் விவசாயிகள் பொங்கல் கரும்பு சாகுபடி செய்துள்ளனர்.ஆண்டுதோறும் தமிழக மக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் கரும்பையும் சேர்த்து வழங்குவதற்காக இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் அனைவரிடமிருந்தும் கரும்புகள் கொள்முதல் செய்வது வழக்கம்.

இந்தாண்டு வெட்டு கூலி உள்பட கரும்பு ஒன்றுக்கு அரசு ரூ.33 என விலை நிர்ணயம் செய்துள்ளது.ஆனால் விவசாயிகளுக்கு கிடைப்பதோ ரூ.20 மட்டுமே. மீதி 13 ரூபாய் போக்குவரத்து, இறக்குகூலி என செலவிடப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் விவசாயிகளோ ”நாங்களே கரும்புகள் வெட்டி அந்தந்த கூட்டுறவு அங்காடிகளில் இறக்கி வைத்துவிடுகிறோம். ஒரு கரும்புக்கு ரூ.28 கொடுங்கள்” என்று கேட்டும் அதிகாரிகள் அதனை காதில் வாங்கவே இல்லை என்றும் புகார் கூறுகின்றனர்.

இந்நிலையில் அதிகாரிகள் தங்களுக்கு வேண்டப்பட்ட விவசாயிகளிடமிருந்து மட்டும் அதிக அளவில் கரும்புகளை கொள்முதல் செய்ய மற்ற கரும்பு விவசாயிகள் கொதித்துப்போனதோடு நாகை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த சீர்காழி தாசில்தார் இளங்கோவன் மற்றும் திருவெண்காடு போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விவசாயிகளிடம் குறைகளை கேட்டார்.இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ‘செம டோஸ்’ விட்டதோடு எந்தவித பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளிடமும் தலா 2500 கரும்புகளுக்கு குறையாமல் கொள்முதல் செய்யவேண்டும்.” என்று அதிரடி உத்திரவிட்டார்.இதனையடுத்து மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் மகாபாரதிக்கு நன்றி தெரிவித்து கலைந்து சென்றனர்.

-ஆர்.விவேக் ஆனந்தன்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow