சிவில் நீதிபதியாக முதல் பழங்குடியின பெண் தேர்வு- எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகளைச் சான்றோள் எனக்கேட்ட தாய்" என்று வள்ளுவரே மாற்றி எழுதும் வண்ணம் ஸ்ரீபதி மென்மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கிறேன்.
டிஎன்பிஎஸ்பி நடத்திய தேர்வில் சிவில் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்ரீபதிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீபதி (23). இவருக்குத் திருமணமாகி குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நடந்த டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வை எழுதியுள்ளார். இதில் ஸ்ரீபதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் ஜவ்வாது மலையில் இருந்து சிவில் நீதிபதியாகத் தேர்வான முதல் பழங்குடியின பெண் பெருமையைப் பெற்றுள்ளார்.
பிரசவம் நடந்த இரண்டே நாளில் கடும் போராட்டத்திற்குப் பிறகு ஸ்ரீபதி தேர்வு எழுதி வெற்றிபெற்றுள்ளார். இதற்குக் கிராம மக்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இதன்மூலம் ஸ்ரீபதி மலைகிராம மாணவர்களுக்கு முன்னுதாரணமாக உள்ளார்.
இந்த நிலையில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், ”திருவண்ணாமலை மாவட்டம் புலியூர் கிராமத்தைச் சேர்ந்த 23 வயதே ஆன ஸ்ரீபதி உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று முதல் பழங்குடியின பெண் நீதிபதியாகத் தேர்வாகி இருப்பதற்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன்,“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகளைச் சான்றோள் எனக்கேட்ட தாய்" என்று வள்ளுவரே மாற்றி எழுதும் வண்ணம் பின்தங்கிய நிலையில் இருந்து இத்தகைய செயற்கரிய சாதனை புரிந்திருக்கும் மாணவி ஸ்ரீபதி மென்மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கிறேன்.எனப் பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?