ஆட்டத்தை ஆரம்பித்த பறக்கும் படை... சென்னையில் ரூ.10.50 லட்சம் பறிமுதல்...

Mar 17, 2024 - 11:28
ஆட்டத்தை ஆரம்பித்த பறக்கும் படை... சென்னையில் ரூ.10.50 லட்சம் பறிமுதல்...

சென்னையில் சனிக்கிழமை நள்ளிரவில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.10.50 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். 

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் சனிக்கிழமை மாலை அறிவித்த நிமிடத்தில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு செல்லப்படுகிறதா என்பது குறித்து தேர்தல் பறக்கும் படையினருடன் இணைந்து, காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக, சென்னை என்எஸ்சி போஸ் சாலை, வால்டாக்ஸ் சாலை சந்திப்பு அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சவுக்கார்பேட்டையில் வசிக்கும் ராஜஸ்தானைச் சேர்ந்த சுஜன் ராம் என்கிற சுரேஷ் என்பவர், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.10.50 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அவரிடம் யானை கவுனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow