வெறியேற்றிவிட்ட "மஞ்சும்மல் பாய்ஸ்" - விபரீதத்தில் இறங்கிய திண்டுக்கல் பாய்ஸ்... பேரதிர்ச்சியில் முடிந்த டிரக்கிங்...

Mar 17, 2024 - 11:10
Mar 17, 2024 - 11:13
வெறியேற்றிவிட்ட "மஞ்சும்மல் பாய்ஸ்" - விபரீதத்தில் இறங்கிய திண்டுக்கல் பாய்ஸ்... பேரதிர்ச்சியில் முடிந்த டிரக்கிங்...

சினிமாவை பார்க்கும் நாம், அதில் வரும் காஸ்ட்யூம் போன்று அணிவதும், காட்சியில் வரும் இடத்திற்கு சுற்றுலா செல்வதும் தவறில்லை. ஆனால், திரையில் பார்த்த த்ரில்லை நிஜ வாழ்க்கையில் அனுபவிக்க நினைத்தால், அது ஆபத்தில்தான் சென்று முடியும் என்பதற்கு உதாரணமாக்கியுள்ளது, மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த திண்டுக்கல்லைச் சேர்ந்த நண்பர்களின் செயல்...

"மஞ்சும்மல் பாய்ஸ்" திரைப்படத்தில் நண்பர்கள் ஒன்று சேர்ந்து கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட குணா குகைக்கு செல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த காட்சியை திரையில் பார்த்த இளைஞர்கள் சிலர், அதேபோன்ற த்ரில்லான அனுபவத்தை பெற முடிவெடுத்து, மூட்டை முடிச்சுகளுடன் குணா குகை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர். 

அந்த வகையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த 10 இளைஞர்கள் மார்ச் 15 ஆம் தேதி, நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள தடை செய்யப்பட்ட கொலக்கம்பை செங்குட்டுவராயன் மலைக்கு சென்றுள்ளனர். அங்கு, மலை ஏற்றத்தில் அவர்கள் ஈடுபட்டிருந்தபோது, தேனீக்கள் கூடு கலைந்துள்ளது. இதையடுத்து, தேனீக்களின் கொட்டில் இருந்து தப்ப, இளைஞர்கள் நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர். பின்னர் அவர்கள் ஒன்றுகூடியபோது, கோபால்பட்டி பகுதியை சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர் மட்டும் மாயமாகியுள்ளார். உடன் வந்த நண்பர்கள் எங்கு தேடியும் பிரவீன் கிடைக்காததால், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

 

இதையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், சம்பவம் நிகழ்ந்த நாளன்று தீவிரமாக தேடிய நிலையில், இரவானதால் பாதி வழியிலேயே திரும்பியுள்ளனர். பின்னர்  மீண்டும் சனிக்கிழமை காலை ட்ரோன் கேமிரா உதவியுடன் தேடுதல் பணியை தொடங்கியுள்ளனர். அப்போது, செங்குட்டுவராயன் மலைப் பகுதியில், 300 அடி பள்ளத்தில் இளைஞரின் சடலம் கிடப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து தங்கள் உயிரை பணயம் வைத்து, 300 அடி பள்ளத்தில் இறங்கி பிரவீனின் உடலை மீட்டனர்.

சீனிமாவில் வரும் சீன்களை பார்த்து ரசிப்பதுடன் கடந்து செல்ல வேண்டும். அதைவிட்டுவிட்டு, திரையில் பார்த்த த்ரில்லை நிஜ வாழ்க்கையில் அனுபவிக்க நினைத்தால், இதுபோன்று சோகத்தில் முடிந்துவிடும். திரை மாயையும், நிஜ வாழ்க்கையும் வேறு என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow