நேற்று மே.வங்க எம்.பி...இன்று அரியானா எம்.பி... அடுத்தடுத்து பதவி விலகும் பாஜக எம்.பிக்கள்...
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரியானா மாநிலம் ஹிஸார் தொகுதியின் எம்.பி ப்ரிஜேந்திர சிங் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
முன்னாள் பாஜக அமைச்சரின் மகனும், அரியானா மாநிலம் ஹிஸார் தொகுதி எம்பியுமான ப்ரிஜேந்திர சிங் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி குனார் ஹெம்ப்ராம், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது சிறிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நேரத்தில், அதனை அதிகரிக்கும் விதமாக அரியானா மாநிலம் ஹிஸார் தொகுதியின் எம்.பியுமான ப்ரிஜேந்திர சிங்கும் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தேர்தலுக்கு முன் 2 பாஜக தலைவர்கள் விலகியது அரசியல் தலைவர்கள் உள்பட பலரை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவரும் முன்னாள் அமைச்சருமான பைரேந்தர் சிங்கின் மகன் தான் ப்ரிஜேந்திர சிங் ஆவார். 1998ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் நாட்டிலேயே 9ஆம் இடம் பிடித்து, ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த ப்ரிஜேந்திரா, முதன்முதலாக 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் ஹிஸார் தொகுதியில் பாஜகவின் சார்பில் போட்டியிட்டார். அப்போது, தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக ஜனதா கட்சியின் துஷ்யந்த் சவுதாலா மற்றும் காங்கிரஸின் பாவ்யா பிஸ்னாயை வீழ்த்தி வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது.
இந்நிலையில், பாஜக கட்சியில் பாரம்பரியமாக இருந்து வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர் கட்சியில் இருந்து விலகியது பேசுபொருளாக மாறியிருக்கிறது. இதனிடையே அவருக்கு வருகிற தேர்தலில் சீட் தர பாஜக மறுத்து வந்ததாகவும், அதன் காரணமாக அவர் காங்கிரஸில் இணைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, உள்ளூர் கட்சியான ஜனநாயக ஜனதா கட்சியுடன் கடந்தாண்டு அக்டோபர் மாதம் பாஜக கூட்டணி வைத்ததும் இவர் பதவி விலகலுக்கு ஒரு காரணம் எனக்கூறப்படுகிறது.
தற்போது டெல்லியில், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, அஜய் மகேன், முகுல் வாஸ்நிக், தீபக் பாபரியா ஆகியோர் முன்னிலையில் ப்ரிஜேந்திர சிங் கட்சியில் இணைந்தார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து மல்லிகார்ஜூன கார்கே வரவேற்றார். அத்துடன் காங்கிரஸின் சின்னம் பொருத்திய சால்வை அவருக்கு வழங்கப்பட்டது
What's Your Reaction?