தேர்தல் பத்திரம் - SBI வழக்கும், SBI-ஐ எதிர்த்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் உச்சநீதிமன்றத்தில் ஒரே நாளில் விசாரணை...

கால அவகாசம் கோரி SBI தாக்கல் செய்த மனுவும் அன்றே விசாரணை

Mar 7, 2024 - 12:48
தேர்தல் பத்திரம் - SBI வழக்கும், SBI-ஐ எதிர்த்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் உச்சநீதிமன்றத்தில் ஒரே நாளில் விசாரணை...

தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் நன்கொடையாளர்கள் பெயர்களை வழங்க SBI உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கோரியுள்ள நிலையில், அதன் மீது தனியார் அமைப்பு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் சேர்த்து இரு வழக்குகளையும் உச்சநீதிமன்றம் மார்ச் 11ம் தேதி விசாரிக்கவுள்ளது. 

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்பும் தனிநபர்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கி மூலம் உறுதிமொழிப் பத்திரத்தைப் பெற்று, நிதி கொடுக்கும் அமைப்பே தேர்தல் பத்திரம் எனப்படுகிறது. 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட இதன் மூலம், தனிப்பட்ட தகவல்கள் எதையும் வெளியிடாமல் ஒருவர் ஒரு கட்சிக்கு நிதி அளிக்கமுடியும். கறுப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியாக இது கொண்டு வரப்பட்டதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 17-ம் தேதி, தேர்தல் பத்திரங்களை ஜனநாயகத்திற்கு எதிரானது என அறிவித்து உச்சநீதிமன்றம் இந்நடைமுறையை ரத்து செய்தது. அந்த வழக்கின் தீர்ப்பில், இதுவரை நன்கொடை அளித்தவர்களின் விவரங்களை மார்ச் 6-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மார்ச் 6-ம் தேதி எஸ்.பி.ஐ நன்கொடை விவரங்களை இதுவரை தாக்கல் செய்யவில்லை.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை மீறிய எஸ்.பி.ஐ மீது, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. மேலும், நன்கொடை விவரங்களைத் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ மனுத்தாக்கல் செய்தது. இந்த நிலையில், இவ்விரண்டு வழக்குகளையும் மார்ச் 11-ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அந்நாளில் எஸ்.பி.ஐயின் கோரிக்கை மனுவும், எஸ்.பி.ஐக்கு எதிரான கண்டன மனுவும் விசாரணைக்கு வரவுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow