உடுமலை சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம்.. உறவினர்கள் தெரிவித்த பகீர் தகவல்
உடுமலை சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், கூடுதலாக எஸ்.சி., எஸ்.டி., சாதி வன்கொடுமை தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில போலீசார் ஜெய காளீஸ்வரன்(19), மதன்குமார்(19), பரணி குமார்(21), பிரகாஷ்(24), நந்தகோபால்(19), பவா பாரதி(22) மற்றும், 14, 15 மற்றும் 16 வயது சிறுவர்கள் என மொத்தம் 9 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இது குறித்து சிறுமியின் உறவினர்கள் கூறும்போது, "17 வயதான சிறுமி பெற்றோரை இழந்ததால் தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வந்தார். 10-ம் வகுப்பு வரை படித்துள்ள சிறுமி, குடும்ப வறுமை காரணமாக ஏதாவது வேலைக்கு செல்ல திட்டமிட்டு வேலை தேடி வந்தார்.
அப்போது அருகில் உள்ள ரேஷன் கடையில் உதவியாளராக பணியாற்றி வந்த 14 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது. பல இடங்களுக்கு சிறுமியை அழைத்துச் சென்ற சிறுவன், அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் தனது நண்பர்கள் 8 பேரின் ஆசைக்கு இணங்கச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார்.
இதனிடையே சிறுமியின் தோழியான மற்றொரு 13 வயது சிறுமியையும் தங்களது ஆசைக்கு அவர்கள் வற்புறுத்தி இணங்க வைத்துள்ளனர். வேலை வாங்கி தருவதாக கூறி, கடந்த ஓராண்டாக 2 சிறுமிகளையும் 9 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
சிறுமிகளுக்கு மது வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் 17 வயதான சிறுமி கர்ப்பமாகவே இந்த சம்பவம் வெளியே தெரிய வந்துள்ளது" என சிறுமியின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் கைதான 9 பேரில், 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் மீது கூடுதலாக எஸ்.சி., எஸ்.டி., சாதி வன்கொடுமை தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கும் போது, மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?