திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலன் வீட்டு முன்பு காதலி தர்ணா..
9 ஆண்டுகளாகக் காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுக்கும் காதலன் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டுள்ள காதலி.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஓடைமேடு பகுதியைச் சேர்ந்த சிவக்குமார்- மாலதி தம்பதியினரின் மகள் சிவரஞ்சனி. இவர் பிஇ முடித்துள்ள பட்டதாரி பெண். அந்தியூர் அடுத்த சமத்துவபுரம், அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் முருகன் - சரசு தம்பதியினரின் மகன் பிரபாகரன். இவர் டெல்லியில் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
பிரபாகரனும் சிவரஞ்சனியும் உறவினர்கள் என்பதால் பிரபாகரன் தனது பாட்டி வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் சிவரஞ்சனியோடு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் கடந்த 9 ஆண்டுகளாகக் காதலித்து வருவதாகத் தெரிகிறது. இவர்கள் காதல் விவகாரம் வீட்டில் தெரிய வந்ததால், பிரபாகரனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, கடந்த ஒரு மாத காலமாக சிவரஞ்சனியுடன் பேசுவதைக் குறைத்துக் கொண்ட பிரபாகரன், சிவரஞ்சனியை திருமணம் செய்து கொள்ள முடியாது என திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து பொங்கல் விடுமுறைக்கு ஊர் திரும்பிய பிரபாகரனிடம் சிவரஞ்சனி நேரில் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். அப்போது பிரபாகரன் திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சிவரஞ்சனி புகார் கொடுத்துள்ளார்.
இருவரையும் அழைத்துப் பேசிய காவல்துறையினர், இருவருக்கும் கவுன்சிலிங் கொடுக்க முடிவு செய்தனர். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருவருக்கும் கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அப்போதும் பிரபாகரன் சிவரஞ்சனியை திருமணம் செய்து கொள்ள முடியாது என்றுதான் கூறியுள்ளார். மீண்டும் இன்று கவுன்சிலிங் வழங்க அதிகாரிகள் முடிவு செய்து அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கும் பிரபாகரன் வீட்டிற்கு வந்த சிவரஞ்சனி அவர்களின் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சிவரஞ்சனி தன் வீட்டிற்கு வருவதை முன்பே அறிந்த பிரபாகரன் மற்றும் அவரின் குடும்பத்தினர் கவுன்சிலிங் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியே சென்றுவிட்டனர்.இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து வந்த அந்தியூர் போலீசார் சிவரஞ்சனியிடம் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க :"பிரதமர் நாற்காலியில் அமர ஒரு தகுதி வேண்டும்; அந்த தகுதி உள்ள ஒரே நபர் ........." - அண்ணாமலை
What's Your Reaction?