மீண்டும் உருவாகிறதா புயல் ? வானிலை ஆய்வு மையம் புது அப்டேட்
தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும், தற்போது தமிழகத்தில் புயல் உருவாக வாய்ப்பில்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் 25ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
24 மணி நேர குறைந்தபட்ச வெப்பநிலை மாறுதல்: இன்று முதல் 23ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரியமாற்றம் ஏதுமில்லை.
எனினும், சற்று குறையக்கூடும். இயல்பு நிலையிலிருந்து குறைந்தபட்ச வெப்ப அளவின் வேறுபாடு: இன்று முதல் 23ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.
இன்று மற்றும் நாளை தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
பனிமூட்டம், வறண்ட வானிலை நிலவும் காரணத்தால் தமிழகத்தில் புயல் உருவாக வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?

