சிசுவுடன் தன் உயிரைக் காப்பற்றிய அரசு மருத்துவமனை ஊழியர்களுடன் குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடிய தாய்

எங்கள் இருவர் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோரின் மத்தியில் எனது குழந்தையின் பிறந்த நாளை கொண்டாடினேன்.

Jan 5, 2024 - 14:37
Jan 5, 2024 - 15:05
சிசுவுடன் தன் உயிரைக்  காப்பற்றிய அரசு மருத்துவமனை ஊழியர்களுடன் குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடிய  தாய்

பிரசவத்தின்போது உயிருக்கு போராடிய நிலையில் தன்னையும்,தன் குழந்தையையும் காப்பாற்றிய அரசு மருத்துவமனையில் தனது குழந்தையின் முதலாவது பிறந்த நாளை அரசு மருத்துவமனையில் ஊழியர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் ஆயிஷா சபானா. இவர் திருமணத்துக்கு பிறகு சென்னையில் கணவருடன் வசித்து வந்ததார்.கர்ப்பம் அடைந்து 28 வாரங்கள் ஆன நிலையில் தனது அம்மா வீட்டுக்கு பட்டுக்கோட்டைக்கு வந்துள்ளார்.அப்போது திடீரென வயிற்று வலி ஏற்பட ஆபத்தான நிலையில் அவரை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இதையடுத்து, ஆயிஷா ஷபானா உடல்நிலை மோசமடைந்து வலிப்பு ஏற்பட்ட நிலையில் டாக்டர்கள் உடனடியாக அவருக்கு 4-1-23 அன்று ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியில் எடுத்தனர்.இந்த நிலையில் ஆபத்தான நிலையிலிருந்து தாயை நீண்ட போராட்டங்களுக்கு இடையே மருத்துவர்கள் காப்பாற்றினர்.அத்தோடு குழந்தை மூச்சு திணறலால் அவதிப்பட்ட நிலையில் குழந்தைக்கு சுவாச கருவி மூலம் செயற்கை சுவாசம் அளித்து ஐந்து நாட்களுக்குப் பிறகு குழந்தையின் உயிரையும் காப்பாற்றினர். 

இந்த நிலையில் தாயும்,குழந்தையும் நலம் அடைந்து ஆயிஷா மீண்டும் தனது கணவர் வீட்டிற்கு சென்னைக்கு சென்று விட்டார்.இந்த நிலையில் குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆன நிலையில் தனது குழந்தையின் பிறந்தநாளை தனது குழந்தையையும் தன்னையும் காப்பாற்றிய பட்டுகோட்டை அரசு மருத்துவமனையில் கொண்டாட வேண்டும் என்று எண்ணிய ஆயிஷா ஷபானா சென்னையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு வந்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோருடன் கேக் வெட்டி குழந்தையின் பிறந்த நாளை கொண்டாடினார். 

இது குறித்து ஆயிஷா ஷபானா கூறுகையில், இது எனது விருப்பம் மட்டுமல்ல எனது கணவர் விருப்பமும் இதுவாகத்தான் இருந்தது.எனவே தான் பட்டுக்கோட்டைக்கு வந்து அரசு மருத்துவமனையில் எங்கள் இருவர் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோரின் மத்தியில் எனது குழந்தையின் பிறந்த நாளை கொண்டாடினேன்.இது எங்களுக்கு மிகுந்த மனநிறைவை தந்துள்ளது என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow