சிரிப்பை அழகாக்க ஆப்ரேஷன்; மணமகன் உயிரிழப்பு - அதிர்ச்சியில் பெற்றோர்....
திருமணம் நடைபெறவிருந்ததை ஒட்டி தனது சிரிப்பை மேலும் அழகுப்படுத்த அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நவீன உலகில் உடல் தோற்றத்தை மெருகேற்ற பெண்களை போன்று ஆண்களும் முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில் பிளாஸ்டிக் சர்ஜரி, பல், முக சீரமைப்பு, உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை போன்றவற்றிற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் பெரும்பாலும் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருந்தாலும் ஒருசில அறுவை சிகிச்சைகள் பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அதிகபட்சமாக உயிரையும் பறிக்கின்றன.
இதுபோன்ற சம்பவம் ஒன்று ஐதராபாத்தில் நிகழந்துள்ளது. ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த 28 வயதான லட்சுமி நாராயணா என்ற இளைஞருக்கு அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அடுத்த வாரம் திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில் லட்சுமி நாராயணாவுக்கு தனது சிரிப்பால் வாய் அமைப்பு அசிங்கமாக இருப்பதாக தாழ்வு மணப்பான்மை ஏற்பட்டுள்ளது.
இதனால் திருமணத்திற்கு முன்பே இதனை சரி செய்ய வேண்டும் என எண்ணிய அவர், ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையை தேர்ந்தெடுத்து, Smile Enhance Surgery என்ற சிரிப்பை மேம்படுத்தும் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவரை அணுகி உள்ளார். அதன்படி இரு தினங்களுக்கு முன்பு பெற்றோருக்கு தெரிவிக்காமல் அறுவை சிகிச்சைக்கு லட்சுமி நாராயணா சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்து முடித்தனர். சிகிச்சை முடிந்து நீண்ட நேரமாகியும் லட்சுமி நாராயணா கண் விழிக்காததால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், அவரை பரிசோதித்து பார்த்த போது உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து லட்சுமி நாராயணாவின் பெற்றோருக்கு மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்தது.
இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் போரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து கொடுத்ததே லட்சுமி நாராயணா உயிரிழப்பு காரணம் என்பது தெரிய வந்தது. திருமணம் நடைபெற சில நாட்களே இருந்த நிலையில் அறுவை சிகிச்சையால் மணமகன் உயிரிழந்த சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?