”அருவருப்பாக உள்ளது! எனக்கும் கூவத்தூருக்கும் என்ன சம்பந்தம்?” - கொந்தளித்த த்ரிஷா!

Feb 20, 2024 - 19:58
”அருவருப்பாக உள்ளது! எனக்கும் கூவத்தூருக்கும் என்ன சம்பந்தம்?” - கொந்தளித்த த்ரிஷா!

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை த்ரிஷாவை சுற்றி அண்மையில் பல்வேறு சர்ச்சைகள் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன.

PETA தொடங்கி, மன்சூர் அலிகான் என, தற்போது அதிமுக வரை அவரை சுற்றி சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லை. அண்மையில் வெளியான லியோ படத்தில் நடித்திருந்த த்ரிஷாவை, அப்படத்தில் நடித்த நடிகர் மன்சூர் அலிகான் இழிவான முறையில் பேசியிருந்தது கண்டனத்துக்குள்ளானது. தன்னால் நடிகை த்ரிஷாவுடன் நடிக்க முடியவில்லை எனவும், தனக்கே உரித்தான பாணியில் சில அவதூறான கருத்துகளையும் மன்சூர் அலிகான் தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்துக்கு பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்த நிலையில், இறுதியாக பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் நடிகர் மன்சூர் அலிகான். அந்த மன்னிப்பை தான் ஏற்றுக் கொள்வதாகவும் நடிகை த்ரிஷா எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த சர்ச்சை அடங்குவதற்குள் நடிகை த்ரிஷா குறித்து முன்னாள் அதிமுக நிர்வாகி தெரிவித்துள்ள கருத்து அரசியல் மற்றும் திரைத்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதும், அவரது ஆதரவாளரான சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான வெங்கடாசலம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்த  ஏ.வி.ராஜூ கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். தன் நீக்கம் குறித்து தற்போது விளக்கம் அளித்த ஏ.வி.ராஜூ, நடிகை த்ரிஷாவை குறிப்பிட்டு கூறியுள்ள கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

செய்தியாளர்களை சந்தித்த  ஏ.வி.ராஜூ, 2017-ம் ஆண்டு கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒன்று சேர்ந்து இருந்தபோது, அவர்களுக்கு மது, பெண்கள் என அனைத்தும் அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாகவும், கூவத்தூருக்கும் நடிகை த்ரிஷாவுக்கும் சம்மந்தம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஏ.வி.ராஜூவின் இந்த சர்ச்சை பேச்சு அதிமுகவினர் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து, இயக்குநரும் நடிகருமான சேரன், வன்மையாக கண்டிக்கிறேன்.. எந்த ஆதாரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நடிகர் சங்கம் இதற்கு தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புவதாகவும் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். 

இயக்குநர் திரு, ஆதாரமற்ற வதந்திகளைப் பார்த்து தான் ஏமாற்றம் அடைந்ததாகவும், த்ரிஷாவுடைய அசாத்திய திறன் மற்றும் திறமை பறைசாற்றப்படும் என்றும், த்ரிஷாவிற்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். இயக்குநர், நடிகர் நடிகைகள் உள்பட திரைத்துறையை சேர்ந்தவர்கள் த்ரிஷாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில், தன் குரலை அழுத்தமாக பதிவிட்டுள்ளார் நடிகை த்ரிஷா. 

இதுகுறித்து தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை த்ரிஷா, “கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான, கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பானது. நிச்சயம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஏ.வி.ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow