அமைச்சர் சி.வி. சண்முகம் மீதான வழக்கு விசாரணைக்கு ரத்து..!
நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் மீது பதிவு செய்யப்பட்ட நான்கு வழக்குகளின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் தாலிக்கு தங்கம் திட்டம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது உள்ளிட்ட விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்து, நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் பேசியிருந்தார்.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில், சி.வி. சண்முகம் மீது இரு பிரிவினர் இடையே வெறுப்பை உண்டாக்குதல், பொதுமக்களிடையே தவறான தகவல்களை அளித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விழுப்புரம் போலிசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குகளின் விசாரணைக்கு தடைக்கோரி சி.வி. சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆளுங்கட்சியை எதிர்த்து பேச உரிமை உள்ளது என்றாலும் எதற்காக இப்படி மோசமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டுமென நீதிபதி கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஒருவர், முன்னாள் அமைச்சராக இருந்தவர், கைத்தட்டுதல்களுக்காக இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.
இதனையடுத்து, சி.வி. சண்முகம் மீதான வழக்குகளின் விசாரணைக்கு தடை விதித்து மனுவை எட்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிக்க | மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார்,..சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி..! யார் இவர்?
What's Your Reaction?