அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த மாட்டேன்- ஓ.பன்னீர்செல்வம் உத்தரவாதம்

உத்தரவாதத்தை மீறினால் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுவரும்படி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுறுத்தினார்.

Nov 30, 2023 - 16:03
அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த மாட்டேன்- ஓ.பன்னீர்செல்வம் உத்தரவாதம்

தனக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் மற்றும் லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த மாட்டேன் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவிலிருந்து இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால், இவற்றை பயன்படுத்த ஒபிஎஸ் அணியினருக்கு தடை விதிக்க கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார், கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஒ.பி.எஸ்க்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து ஒ.பி.எஸ். தாக்கல் செய்த மேல்முறையீடு நவம்பர் 16ல் விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளனர்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பாக விசாரணக்கு வந்தது.அப்போது, இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவின் நிலை என்ன? என  நீதிபதி கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த ஒ.பன்னீர் செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர் P.H.அரவிந்த் பாண்டியன், மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், தீர்ப்பு வரும் வரை இந்த வழக்கை ஒத்திவைக்கலாம் எனவும் கூறினார். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு மூத்த வழக்கறிஞர் விஜய் நாரயண், தீர்ப்பு வரவில்லை என்றால், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்து வாதத்தை தொடங்கலாமே? என தெரிவித்தார்.அவ்வாறு ஒத்திவைப்பதாக இருந்தால் பன்னீர்செல்வத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டிக்க வேண்டும் என்றார்.

இதற்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.மேலும்,வழக்கு நிலுவையில் உள்ள வரை அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை பயன்படுத்த மாட்டேன் என ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் உத்தரவாதமும் அளிக்கப்பட்டது.இதனையடுத்து, வழக்கின் விசாரணையை டிசம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி உத்தரவாதத்தை மீறினால் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுவரும்படி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுறுத்தினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow