சிம் கார்டு பயன்படுத்தி சட்ட விரோத செயல் - 3 ஆண்டு ஜெயில் : மத்திய அரசு எச்சரிக்கை
போலி சிம் கார்டுகளை பயன்படுத்தி பல்வேறு சட்ட விரோத செயல்கள் அரங்கேறுகின்றன.மோசடிகள் நடந்தால் சிம்கார்டு யார் பெயரில் உள்ளதோ அவர்களே முழு பொறுப்பாவர்கள் என்று தொலைத்தொடர்புத்துறை எச்சரித்துள்ளது.
மத்திய தொலைத்தொடர்புத்துறை தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஆன்லைன் மோசடி உள்பட சட்ட விரோத செயல்களுக்கு ஒரு செல்போன் எண் பயன்படுத்தப்பட்டால், அந்த எண்ணுக்கு உரிய சிம்கார்டு யார் பெயரில் இருக்கிறதோ அவர்களே குற்றவாளியாக கருதப்படக்கூடும். செல்போன் சந்தாதாரர்கள் இத்தகைய விஷயங்களை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
எனவே, வாடிக்கையாளர்கள் கவனமுடன் இருப்பது அவசியம். மற்றவர்களுக்கு தங்கள் சிம்கார்டை அளிப்பதை தவிர்ப்பது அவசியம். அதேபோல, செல்போன்களில் உள்ள ஐஎம்இஐ எண்களை மாற்றுதல், திருத்துதல், சிதைத்தல் போன்றவற்றில் ஈடுபடுவதை தொலைத்தொடர்பு விதிகள் தடை செய்கிறது. ஐஎம்.இ.ஐ எண்கள் மாற்றப்பட்ட செல்போன்களை பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
தொலைத்தொடர்பு சட்ட விதிகளை மீறும்பட்சத்தில் மூன்று ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனையோ அல்லது 50 லட்சம் ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்படும். அல்ல்லது இந்த இரண்டும் சேர்த்தே விதிக்கப்படும். வாடிக்கையாளர்கள் தங்கள் பெயரில் எத்தனை சிம்கள் உள்ளன? என்பதை சஞ்சார் சாதி என்ற இணையதளம் மற்றும் ஆப் வழியாக பரிசோதனை செய்து கொள்ள முடியும்.
அதேபோல, செல்போனின் வர்த்தக பெயர், ஐஎம்இஐ எண்கள் பற்றிய விவரங்கள், செல்போன் மாடல், எந்த கம்பெனி போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும். அதேபோல, உதிரிபாகங்களை கொண்டு உருவாக்கப்பட்ட மோடம் போன்ற சாதனங்களையும் வாங்கக் கூடாது. போலி ஆவணங்கள், ஆள் மாறாட்டம் செய்து சிம் கார்டு வாங்கக் கூடாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?

