புதுச்சேரியில் வெறிநாய்கள் கடித்து 10 பேர் காயம் - கருத்தடை செய்யக் கோரிக்கை
புதுச்சேரி நகரில் வெறி நாய்களின் எண்ணிக்கை பெருகி வரும் நிலையில் சமீபத்தில் வெறிநாய்கள் கடித்ததில் 10 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி நகரில் சமீபமாக நாய்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் நகராட்சி நிர்வாகம் சார்பில் நாய்களைப் பிடித்துச் செல்லும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பிடிக்கப்படும் நாய்கள் கொல்லப்படுவதை விலங்குகள் நல ஆணையம் எதிர்த்ததைத் தொடர்ந்து நாய்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட்டு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கருத்தடை மேற்கொள்ளப்பட்டது.
சமீப ஆண்டுகளாக நாய்களுக்குக் கருத்தடை செய்யும் பணியும் புதுச்சேரி நகரில் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும், இதனால் புதுச்சேரி நகரம் முழுவதும் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருப்பதாக புதுச்சேரி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் நகரின் மையத்தில் உள்ள உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை முடக்கு மாரியம்மன் கோவில் வீதி, ஒத்தவடை வீதி, புதுத்தெரு போன்ற பகுதிகளில் வெறி பிடித்த தெரு நாய்கள் அப்பகுதி சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோரை கடித்துள்ளது.
நாய்க்கடிக்கு ஆளானவர்களில் பத்து வயது பள்ளி சிறுவன் உட்பட முதியவர்களும் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிறுவனைத் தவிர மற்ற அனைவரும் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனர். 10 வயது சிறுவனுக்கு மட்டும் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அறிந்த அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு, மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுபவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். மேலும் சம்பவ இடத்திற்குச் சென்று தெரு நாய்கள் அதிகரிப்பதைப் பார்த்த அவர் உடனடியாக நகராட்சி அதிகாரிகளுக்கு நாய்களைப் பிடிக்க உத்தரவிட்டார். அதனையடுத்து நகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து வெறிபிடித்த தெரு நாய்களை பிடித்தனர்.
புதுச்சேரி அரசு விரைந்து செயல்பட்டு நாய்களின் பெருக்கத்தை தடுக்க வேண்டும் இல்லையென்றால் நகரில் உள்ள ஒரு லட்சம் நாய்களால் மக்களுக்குப் பேராபத்து உள்ளது என்று மக்கள் சட்டமன்ற உறுப்பினர் நேரு கூறினார்.
What's Your Reaction?