சமூக நீதி குறித்து பேசும் தகுதியை தமிழக அரசு இழந்துவிட்டது! – ராமதாஸ் காட்டம்
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 17 பணியிடங்களை அருந்ததியர் பிரிவுக்கு ஒதுக்கி ஆள் தேர்வு அறிக்கையை வெளியிடுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், சமூக நீதி குறித்து பேசும் தகுதியை தமிழ்நாடு அரசு இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 12 பேராசிரியர்கள் உள்ளிட்ட 26 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு (சிண்டிகேட்) ஒப்புதல் அளித்திருக்கிறது. 26 ஆசிரியர் பணியிடங்களில் 17 பணியிடங்கள் அருந்ததியர் சமூகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டிய நிலையில், அந்த இடங்கள் பொதுப் போட்டிப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருப்பதும், அதற்கு தமிழக அரசே ஆதரவளித்திருப்பதும் கண்டிக்கத்தக்கது.
இந்தப் பணியிடங்கள் நீண்டகாலமாக காலியாக இருக்கும் நிலையில், அவற்றை நிரப்புவது வரவேற்கத் தக்கதுதான். ஆனால், இட ஒதுக்கீட்டின் அடிப்படையான 200 புள்ளி ரோஸ்டர் விதிகளுக்கு முரணாக அனைத்துப் பணியிடங்களும் பொதுப்போட்டிப் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது சமூக அநீதியாகும்.
பொதுப்போட்டிப் பிரிவில் முதல் முறை நிரப்பப்பட்ட பணியிடத்தை அடுத்த முறை அருந்ததியரைக் கொண்டுதான் நிரப்ப வேண்டும் என்பதற்கு பெரியார் பல்கலைக்கழகத்திலேயே முன்னுதாரணங்கள் உள்ளன. 2015-ம் ஆண்டில் அருந்ததியருக்கு ஒதுக்கப்பட்ட பணி, இப்போது பொதுப்போட்டிக்கு மாற்றப்பட்டது எப்படி? என்பதை பல்கலைக்கழக நிர்வாகமும், அதன் தவறுகளுக்குத் துணை போகும் அரசும்தான் விளக்க வேண்டும்.
அரசின் விசாரணைக் குழுவால் தவறு என்று உறுதி செய்யப்பட்ட சமூக அநீதியைப் பல்கலைக்கழக நிர்வாகம் மீண்டும் செய்வதையும், அதை தவறு என்று கூறிய தமிழ்நாடு அரசு, அத்தவறுக்கு இப்போது ஆதரவு அளித்து அங்கீகரிப்பதையும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. பெரியார் பல்கலைக்கழகத்தின் சமூக நீதி சூறையாடல்களுக்கு தமிழக அரசின் உயர்கல்வித்துறையும், அதனால் நியமிக்கப்பட்ட ஆட்சிக்குழு உறுப்பினர்களும் துணை போவதாகவே கருத வேண்டியுள்ளது. அருந்ததியருக்கு இப்படி ஒரு சமூக அநீதியை இழைத்த தமிழக அரசு, இனி சமூக நீதி குறித்து பேசுவதற்கான தகுதியை இழந்து விட்டது.
பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 26 ஆசிரியர் பணியிடங்களை பொதுப்போட்டிப் பிரிவுக்கு ஒதுக்கி ஆட்சிக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை பல்கலைக்கழகமும், அரசும் கைவிட வேண்டும். அவற்றில் 17 பணியிடங்களை அருந்ததியர் பிரிவுக்கு ஒதுக்கி ஆள்தேர்வு அறிவிக்கையை வெளியிடுமாறு பல்கலைக்கழகத்தை தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும். இனி வரும் காலங்களில் நடைபெறவுள்ள பணி நியமனங்களில் 200 புள்ளி ரோஸ்டர் துல்லியமாக பின்பற்றப் படுவதையும், அதற்கான பதிவேடு பராமரிக்கப்படுவதையும் அனைத்துப் பல்கலைக்கழகங்களும், உயர்கல்வித்துறையும் உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?