வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா.. தமிழகத்தில் 40 இடங்களில் ஐடி ரெய்டு.. அரசியல் கட்சியினர் அதிர்ச்சி
தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில், கடந்த சில நாட்களாக வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சி பிரமுகர்களின் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை மேற்கொள்கிறார்கள்.
திருநெல்வேலியில் உள்ள மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று இரவு திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில், கணக்கில்வராத ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், சேலம் துணை மேயர் சாரதா தேவி வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
திருநெல்வேலி மத்திய மாவட்டதிமுக அலுவலகம், பாளையங்கோட்டை மகாராஜ நகரில் உள்ளது. இந்த அலுவலகத்தில் மாவட்ட திமுக செயலரும், சட்டசபை முன்னாள் தலைவருமான ஆவுடையப்பன் தலைமையில் திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. அப்போது திடீரென 9 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின்போது கணக்கில் வராத பணம் மற்றும்முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. சோதனைக்குப் பின்னர் வெளியே வந்த அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, எவ்வளவு தொகை கைப்பற்றப்பட்டது என்பது குறித்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
இது தொடர்பாக மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் செய்தியாளர்களிடம் கூறும்போது,வருமான வரித் துறையினரின் சோதனையில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று தெரிவித்தார். வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக, திமுக அலுவலகத்தில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலின் பேரில் இந்த சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பணப்பட்டுவாடா தொடர்பான வருமான வரி கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகார் மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை விரும்பாக்கம் ரத்னா நகரில் ஒரு வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அரசு ஒப்பந்தங்களை எடுக்கும் 8 காண்டிராக்டர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. திருநெல்வேலியில் அதிமுகவின் முக்கிய பிரமுகரும் அரசு ஒப்பந்ததாரருமான ஆர் எஸ் முருகன் என்பவரது வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 450 கோடி ரூபாய் மதிப்புள்ள நெல்லை தென்காசி நான்கு வழி சாலையின் ஒப்பந்ததாரரும் அதிமுகவின் நாங்குநேரி தொகுதியின் பொறுப்பாளருமான அதிமுக பிரமுகர் ஆர்எஸ் முருகன் வீட்டில் தற்போது வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இவர் தமிழ்நாட்டின் சாலை அரசு ஒப்பந்தங்களை எடுத்து செய்து வருபவர் ஆவார். அதிமுக பிரமுகராக இருந்தாலும் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இவர் மிகப்பெரிய அரசு ஒப்பந்தங்களை மொத்தமாக எடுத்து செயல்படுத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?